டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பயங்கரவாதிகளின் செல்போன் மற்றும் டைரியை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிஎன்ஏ சோதனையில் உறுதி
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காரை ஓட்டி சென்றது மருத்துவர் உமர் முகமது தான் என டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர்களின் டைரி மற்றும் செல்போன்களை ஆய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கும்பலுக்கு பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வெளியே உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினருடன் டெலிகிராம் செயலி மூலம் உரையாடியது தெரிய வந்துள்ளது.
டிசம்பர் 6
இதில், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 ஆம் திகதியே குண்டு வெடிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
டெல்லியில் 6 முதல் 7 இடங்களிலும் குண்டு வெடிப்பை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
மேலும், நாட்டின் 4 முக்கிய நகரங்களிலும் தொடர் குண்டு வெடிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு நகரிலும் 2 பேர் வீதம் 8 பேர் இந்த திட்டத்தில் பங்கெடுக்க திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவும் பல IED-க்களை கொண்டு செல்ல திட்டமிட்டிருந்துள்ளனர்.
இதே போல் மருத்துவர் முசமில் ஷகீல் ஜனவரி குடியரசு தினத்தன்று செங்கோட்டை பகுதியில் காரில் பலமுறை சுற்றி வந்துள்ளார். குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதே போல் தீபாவளியின் போதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தீவிர ரோந்து காரணமாக இந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் உமர், கூட்டாளியான மருத்துவர் முசம்மில் ஷகீல் கனாய் துருக்கி பயணம் சென்ற போது, அங்கே ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 2 பேரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, டிசம்பர் 6 ஆம் திகதிக்கான தாக்குதல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் முசம்மில், மருத்துவர் அதீல், உமர் மற்றும் ஷாஹீன் ஆகியோர் இணைந்து சுமார் 20 லட்சம் ரூபாய் பணம் திரட்டி, டெல்லி குண்டுவெடிப்புக்கு முன்பு உமரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதே போல், ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் தனி தனி வாகனங்கள் தயார் செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இணையத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, உமர் ஒரு வாகன அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை (VBIED) ஒன்று சேர்ப்பதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், டெல்லியில் வெடித்த i20 காரில் VBIED முழுமையடையவில்லை. ஏனெனில் துண்டுகள் இணைக்கப்படாமல் இருந்துள்ளது.
தனது குழுவை சேர்ந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், திட்டம் தோல்வியடைந்த ஆத்திரத்தில் வெடிக்க வைத்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |