நெருப்புடன் விளையாட வேண்டாம்... தைவான் விவகாரத்தில் குட்டி நாடொன்றை மிரட்டிய சீனா
தைவான் விவகாரத்தில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்படும் எந்தவொரு மோதலிலும் பிலிப்பைன்ஸ் தலையிடும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
சாக்குப்போக்கு அல்ல
இந்த நிலையிலேயே பிலிப்பைன்ஸ் நெருப்புடன் விளையாடுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவிற்கு அரசு முறை விஜயம் செய்தபோது ஜனாதிபதி மார்கோஸ் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
பிலிப்பைன்ஸ் தைவானுக்கு புவியியல் ரீதியாக அருகாமையில் இருப்பதும், அதிக எண்ணிக்கையிலான பிலிப்பைன்ஸ் மக்கள் அங்கு வசிப்பதும் எதிர்கால மோதலில் ஈடுபடுவதற்கான காரணங்களாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த காரணங்கள் ஒரு நாடு மற்ற நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கான சாக்குப்போக்கு அல்ல என சீன வெளிவிவகார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே சீனா கொள்கையை பிலிப்பைன்ஸ் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சீனாவின் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் நெருப்புடன் விளையாடுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்துவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு சூழ்ச்சி
தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பிரதேசம் தொடர்பாக சீனாவிற்கும் மணிலாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தக் கருத்து மோதல் வெடித்துள்ளது.
இரு தரப்பினரும் ஆக்கிரமிப்பு சூழ்ச்சிகள் மற்றும் இறையாண்மை மீறல்கள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தைவானை அதன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக சீனா தொடர்ந்து கூறி வருகிறது, ஆனால் தைவான் அரசாங்கம் அதை நிராகரித்து வருகிறது.
இந்த நெருக்கடியான நிலையிலேயே, தைவான் தொடர்பில் ஒரு முழுமையான போர் நடந்தால், நாங்கள் அதில் தலையிடுவோம் என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |