சீனாவிற்கு பேரிழப்பு... அமெரிக்காவால் லிபியாவின் நிலை இனி வெனிசுலாவிற்கும்
வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவே நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறினாலும், சீனாவிற்கு நெருக்கடி அளிக்கவும், எண்ணெய் வளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதுமே நோக்கம் என கூறுகின்றனர்.
பேரழிவுமிக்க வெளிப்பாடு
இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் தலைநகரத்தை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வேளையில், அதன் ஜனாதிபதியை ஒரு கொடூரமான மற்றும் துணிச்சலான இரவு நேரத் தாக்குதலின் மூலம் கடத்திச் சென்று சிறைப்பிடித்துள்ளது.

வெனிசுலா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல், அமெரிக்காவின் அப்பட்டமான அதிகாரத்தின் ஒரு பேரழிவுமிக்க வெளிப்பாடு என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்விக்கு, வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தல் மட்டுமல்ல, சீனாவிற்கு அழுத்தமளிப்பது மற்றும் எண்ணெய் வளம் மீது ஆதிக்கம் செலுத்துவது என்றே கூறுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கத் தெருக்களில் பெருமளவில் பரவிய கோகெய்ன் மற்றும் பிற போதைப்பொருட்களில் பெரும்பாலானவை, கராகஸில் உண்மையான அதிகாரத்தைச் செலுத்தும் வெனிசுலா குழுக்களிடமிருந்து வந்தவை என்றே கூறுகின்றனர்.
ஆனால், தற்போது மதுரோ மீது சுமத்தப்பட்டுள்ள அதே குற்றச்சாட்டில் சிக்கிய ஹோண்டுராஸ் ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸுக்கு கடந்த நவம்பர் மாதம் ட்ரம்ப் பொது மன்னிப்பு வழங்கினார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான ஹெர்னாண்டஸ் 45 வருடங்கள் சிறை விதிக்கப்பட்டு, கடந்த 3 வருடங்களாக அமெரிக்க சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

எண்ணெய் இறக்குமதி
போதைப்பொருட்களால் நாட்டிற்கு அச்சுறுத்தல் என ட்ரம்ப் கூறி வந்தாலும், வெனிசுலாவின் எண்ணெய் வளம் காரணமாகவே மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவை அடுத்து மிகவும் மலிவான எண்ணெய் இறக்குமதியை மேற்கொண்டுவந்த சீனா தற்போது வேறு வழிகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாரத்தில், வெனிசுலா தனது எண்ணெய் வர்த்தகம் அனைத்தையும் தேசியமயமாக்கியது. இதில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளும் அடங்கும். இதை சமீபத்தில் கொள்ளை என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
மதுரோ கைது செய்யப்பட்டாலும், அவரது செல்வாக்கு மிக்க ஆதரவாளர்கள் தற்போதும் வெனிசுலாவில் உள்ளனர். அவர்கள், வெனிசுலாவின் ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்கள்.

மட்டுமின்றி, அமெரிக்க இராணுவம் கராகஸில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், வலுவான போதைப்பொருள் குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த இனி களமிறங்கும்.
முன்னர் ஒபாமா நிர்வாகம் லிபியாவின் கடாபியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு உதவிய பிறகு, பின்வாங்கி, அந்த நாடு ஆளமுடியாத ஒரு சீரழிந்த நிலைக்குச் செல்ல அனுமதித்ததைப் போலவே, வெனிசுலாவிலும் குழப்பம் ஏற்பட வலுவான வாய்ப்பு உள்ளது என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |