மியான்மரில் இராணுவ புரட்சிக்கு எதிரான ஐ.நா நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சீனா! எதற்காக?
மியான்மரில் இராணுவ புரட்சியை கண்டித்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கூட்டு அறிக்கையை சீனா தடுத்துள்ளது.
அரசியல் தலைவர் ஆங் சான் சூ கி மற்றும் நூற்றுக்கணக்கான பிற சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த பின்னர் அந்நாட்டு இராணுவம் திங்கள்கிழமை மியான்மர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலைவர்கள், அமைச்சரவையில் இடம்பெறும் உச்ச சபையை அமைத்துள்ளனர்.
மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில், எதிர்ப்பு மற்றும் வன்முறைக்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் செவ்வாயன்று கூடியது, ஆனால் மியான்மர் இராணுவ புரட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட சீனா ஆதிரிக்காமல் தடுத்தது.
இதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கண்டன அறிக்கை வெளியிடவில்லை.
மியான்மர் இராணுவ புரட்சிக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக வீட்டோ அதிகாரத்தை வைத்திருக்கும் சீனாவின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது மியான்மரின் உள்நாட்டு பிரச்சினை என்று கருதுவதால் சீனா கூட்டு கண்டன அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
பொருளாதாரத் தடைகள் அல்லது சர்வதேச நாடுகளின் அழுத்தம் மியான்மரில் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.