சீனா எடுத்துள்ள முடிவு... பல பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொள்ளவிருக்கும் ஜப்பான்
சீனர்கள் ஜப்பான் நாட்டிற்கு பயணப்பட வேண்டாம் என அந்த நாடு தடை விதித்துள்ள நிலையில், ஜப்பானின் சுற்றுலா வருவாய் கடுமையாக சரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
ஜப்பானின் சுற்றுலா சேவை நிறுவனம் ஒன்று ஆண்டின் எஞ்சிய நாட்களுக்கான அதன் முன்பதிவுகளில் 80 சதவீதத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சீன வாடிக்கையாளர்களை மட்டுமே நம்பி செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவின் அந்த முடிவு உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானின் பொருளாதாரத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சியின் தைவான் தொடர்பான கருத்தே சீனாவின் கோபத்திற்கு காரணம். இதனால் சீனாவில் இருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், சுற்றுலா தொடர்பான பங்கு விலைகளும் கடும் சரிவை எதிர்கொண்டது.
ஜப்பானின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா வருவாய் சுமார் 7 சதவீதம் பங்களிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஜப்பானின் பொருளாதார வளர்சசிக்கு சுற்றுலாவே காரணமாக இருந்து வந்தது.
ஜப்பானில் வருகைதரும் பயணிகளில் ஐந்தில் ஒரு பங்கு சீனா மற்றும் ஹொங்ஹொங்கிலிருந்து வரும் பார்வையாளர்கள் என்றே தரவுகளில் தெரிய வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் புறக்கணிப்பு என்பது ஜப்பான் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 14.23 பில்லியன் டொகர் இழப்பை ஏற்படுத்தும் என்றே ஆய்வில் தெரிய வருகிறது.
குடிமக்களுக்கு எச்சரிக்கை
ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட சீன விமான நிறுவனங்கள் டிசம்பர் 31 வரை ஜப்பான் செல்லும் வழித்தடங்களில் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், ஏற்கனவே சுமார் 500,000 பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசியாவின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையேயான மிகக் கடுமையான தூதரக மோதலை தகைச்சியின் பேச்சு தூண்டியது.

சீனாவை அடுத்து ஜப்பானும், அந்த நாட்டில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் கேட்டுக்கொண்டது.
தைவான் தொடர்பில் பிரதமர் தகைச்சியின் கருத்தை திரும்பப்பெற வேண்டும் என சீனா வலியுறுத்தி இருந்தாலும், ஜப்பான் மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |