நான் இருக்கும் வரை சீனாவால் அதை செய்யவே முடியாது: ஜோ பைடன் சபதம்!
தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சீனா அமெரிக்காவை வீழ்த்தி உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக மாறவே முயாது என ஜோ பைடன் சபதம் எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது, சீனா அமெரிக்காவைக் கடந்து உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக மாற எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் தடுப்பேன் என கூறினார்.
உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கிடையிலான போட்டியில் அமெரிக்கா மேலோங்கி இருப்பதை உறுதி செய்வதற்காக பெருமளவில் முதலீடு செய்துவருவதாக உறுதியளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் கீழ் துணை ஜனாதிபதியாக பணியாற்றியபோது, சீன ஜனாதிபதி Xi Jinping-உடன் பல மணிநேரங்கள் செலவிட்டுள்ளதாக கூறிய ஜோ பைடன், Xi ஏகாதியபத்தியத்தையே நம்புவதாகவும், ஜனநாயகத்தில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த விடயத்தில் Xi, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பின்பற்றுவதாகவும் கூறினார்.
மேலும் அவருடன் பேசும்போது, அமெரிக்கா மோதலை எதிர்பார்க்கவில்லை என்று Xi-க்கு தெளிவுபடுத்தியதாகவும், நியாயமான போட்டி, நியாயமான வர்த்தகம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றிற்கான சர்வதேச விதிகளை சீனா பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஜோ பைடன் கூறினார்.
உலகின் முன்னணி நாடாக, செல்வந்த நாடாக மற்றும் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக மாறுவதே சீனாவின் ஒட்டுமொத்த குறிக்கோளாக இருப்பதாகவும், ஆனால் "எனது கண்காணிப்பில் அது மட்டும் நடக்கப்போவதில்லை" என உறுதியாக கூறியுள்ளார்.
