அதிக மரணம்... உண்மையான தோற்றம் அங்கிருந்துதான்: அமெரிக்காவை குற்றஞ்சாட்டும் சீனா
கோவிட் தொற்றுநோய் தொடங்கிய இடம் அமெரிக்காவாக இருக்கலாம் என்று கூறி, சீனா அமெரிக்கா மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
வெள்ளை அறிக்கை
சீன அரசு மன்ற தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் அமெரிக்கா மீது கோவிட் விவகாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் 1.2 மில்லியன் மரணம் பதிவாகியுள்ளதையும், இதனால் அமெரிக்காவில் இருந்து கோவிட் தோன்றியிருக்கலாம் என்றும் அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கோவிட் தொற்று கசிந்திருக்கலாம் என ட்ரம்ப் நிர்வாகம் கூறி வரும் நிலையில், இதற்கு பதிலடியாக அமெரிக்காவை குற்றஞ்சாட்டி சீனா அந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி அமெரிக்கா தனது ஆரம்ப கையாளுதல் தவறுகளை மறைக்க, தொற்றுநோயின் தோற்றத்தை ஒரு அரசியல் ஆதாயத்திற்காக மாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், வைரஸின் தோற்றம் குறித்து முழுமையான மற்றும் ஆழமான விசாரணை அமெரிக்காவில் நடத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச சமூகத்தின் நியாயமான கவலைகளுக்கு அமெரிக்கா பதிலளிக்க வேண்டும் என்றும் உலகிற்கு பொறுப்பான பதிலை அளிக்க முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே குறைத்தது
மட்டுமின்றி, கோவிட் பெருந்தொற்று தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அற்விக்கப்படும் முன்பே, சீனாவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அமெரிக்காவில் தோன்றியிருக்கலாம் என்பதற்கான கணிசமான சான்றுகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா தனது சொந்த பாதிப்பின் தீவிரத்தை வேண்டுமென்றே குறைத்தது என்றும் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுகளை அந்த அறிக்கையில் சீனா குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரை ஒன்பது அமெரிக்க மாகாணங்களில் இருந்து 7,389 இரத்த மாதிரிகளில் 106 இல் கோவிட் மாதிரிகள் கண்டறியப்பட்டதாக CDC ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி சீனா வெள்ளை அறிக்கை வெளியிடட்டுள்ளது.
சீனா முதல் முறையாக கோவிட் பரவல் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக தகவல் அளிக்கும் முன்பே அமெரிக்காவில் வைரஸ் இருந்திருக்கலாம் என்பதையும் அந்த அறிக்கையில் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |