ஜப்பானுக்கு கடும் நெருக்கடி அளிக்கத் தொடங்கிய சீனா... கப்பல்கள் திடீர் ரோந்து
ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்காகு தீவுகள் அருகே சீன கடலோர காவல்படை கப்பல்களின் அணிவகுப்பு திடீர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது புதிய நெருக்கடிய ஏற்படுத்தியுள்ளது.
இராணுவ நடவடிக்கை
தைவான் தொடர்பில் ஜப்பான் பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீனா கடும் நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.

நவம்பர் 7 ஆம் திகதி ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி தைவான் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்து சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான தூதரக மோதல்களை தீவிரபப்டுத்தியுள்ளது.
ஜனநாயக முறைப்படி ஆட்சி நடத்தப்படும் தைவான் மீது சீனா இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கும் என்றால், தற்காப்புக்கு என ஜப்பானும் தங்கள் இராணுவத்தைக் களமிறக்க நேரிடும் என்றே தகைச்சி குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தகைச்சி கருத்துக்கு சீனா கோபத்துடன் பதிலளித்ததுடன், தகைச்சி அவற்றை முறையாக திரும்பப் பெறுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.
ஆனால் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தமது கருத்தில் தாமும் ஜப்பான் நிர்வாகமும் உறுதியாக இருப்பதாக தகைச்சி பதிலளித்துள்ளார். தைவானை தங்களது சொந்தப் பிரதேசமாகக் கூறிவரும் சீனா, தைவானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதையும் நிராகரிக்கவில்லை.

ஜப்பானை பொறுத்தமட்டில், வெறும் 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தைவான். இந்த நிலையில், சீன கடலோர காவல்படை கப்பல் 1307, டயோயு தீவுகளின் கடல் எல்லைக்குள் ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
இது சீன கடலோர காவல்படை தனது உரிமைகள் மற்றும் நலன்களை நிலைநிறுத்துவதற்காக நடத்திய சட்டப்பூர்வமான ரோந்து நடவடிக்கை என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
கடும் நெருக்கடி
தைவானை உரிமைகோருவது போலவே ஜப்பான் நிர்வாகத்தில் உள்ள தீவுகளைச் சுற்றி சீனாவும் ஜப்பானும் பலமுறை மோதிக் கொண்டுள்ளன. சீன நிர்வாகம் டயோயு தீவு என குறிப்பிடுவதை ஜப்பான் நிர்வாகம் சென்காகு தீவு என அடையாளப்படுத்தி வருகிறது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் தகைச்சி தனது கருத்துக்களை தெரிவித்ததிலிருந்து ஜப்பான் சீனாவிடமிருந்து கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
இரு நாடுகளின் தூதர்களும் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஜப்பானுக்கு பயணப்பட வேண்டாம் என தனது குடிமக்களுக்கு சீனா அறிவுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக ஜப்பானுக்கான பயணச் சீட்டுகளை மேலதிக கட்டணமின்றி மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தைத் திரும்ப பெறலாம் என்று மூன்று சீன விமான நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்தன.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றி 30 சீன இராணுவ விமானங்களும் ஏழு கடற்படைக் கப்பல்களும் இயங்குவதைக் கண்டறிந்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |