சீனாவால் சில நொடிகளில் பிரித்தானியாவை முடக்கிவிட முடியும்: முன்னாள் MI6 தலைவர் எச்சரிக்கை
பிரித்தானியாவின் கார் சந்தையில் சீனாவின் பங்கு தற்போது 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் வருடங்களிலும் இந்த எண்ணிக்கை வேகமாக வளரத் தொடங்கும்.
சீனாவால் லண்டனில்
ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளால் சீனா தற்போது அமெரிக்க சந்தையில் இருந்து அதிகளவில் வெளியேறும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. அதுவே தற்போது பிரித்தானிய மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் MI6 அமைப்பின் முன்னாள் தலைவர் ரிச்சர்ட் டியர்லவ் சமீபத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. ஒரே நேரத்தில் 400 மின்சார கார்களின் கட்டுப்பாடுகளை முடக்குவதன் மூலம் சீனாவால் லண்டனில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்று ரிச்சர்ட் டியர்லவ் எச்சரித்துள்ளார்.
மட்டுமின்றி, சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களின் விற்பனையையும் தடை செய்வதற்கு வலுவான பாதுகாப்பு சிக்கல் உள்ளது என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பீதியை ஏற்படுத்துவதற்கு அல்ல மாறாக, வாய்ப்பு உள்ளது என்றே அவர் தெரிவித்துள்ளார். அனைத்து புதிய வாகனங்களும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றை தூரத்திலிருந்து எளிதாக செயலற்றதாக மாற்றலாம்.
2022ல் உக்ரைனின் Melitopol நகரை மொத்தமாக கைப்பற்றிய ரஷ்ய துருப்புக்கள் John Deere நிறுவனத்தின் உயர்ரக விவசாய வாகனங்களை மொத்தமாக கொள்ளையிட்டு சென்றனர்.
இதனையடுத்து அந்த வாகனங்களை எவ்வாறு ரஷ்யா கட்டுப்படுத்தும் என்பதை உக்ரைன் தரப்பு காணொளியாக வெளியிட்டுள்ளதையும் ரிச்சர்ட் டியர்லவ் சுட்டிக்காட்டியுள்ளார். 700 மைல்கள் தொலைவில் அந்த வாகனங்களை கொண்டு சென்ற ரஷ்யாவால் அந்த வாகனங்களை பயன்படுத்த முடியாமல் போயுள்ளது.
ரஷ்ய துருப்புகள் கொள்ளையிட்டு சென்றதை அறிந்த John Deere நிறுவனம் உடனடியாக செயல்பட்டு அந்த வாகனங்கள் அனைத்தையும் தொலைவில் இருந்தே முடக்கியுள்ளது.
மின்சார வாகனங்களுடன்
இதனால் விற்பனையாகும் அனைத்து மின்சார வாகனங்களின் கட்டுப்பாடும், அந்த நிறுவனங்கள் வசம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சீன ஹேக்கர்கள் குழு ஒன்று, டெஸ்லா காரில் உள்ள சுய-ஓட்டுநர் மென்பொருளை எவ்வாறு ஏமாற்றி, எதிரே வரும் போக்குவரத்தில் தலையிடச் செய்தது என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒரு வாகனத்தின் பூட் கன்ட்ரோல்கள், விண்ட்ஸ்கிரீன் வைப்பர்கள் மற்றும் பிரேக்குகளை கூட ரிமோட் மூலம் எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதையும் சில குழுக்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் பிரித்தானியப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் பணிபுரியும் நிறுவனங்கள், முக்கியமான தரவுகள் பிரித்தெடுக்கப்பட்டு சீனாவிற்கு அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில், தங்கள் மொபைல் போன்களை சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுடன் இணைக்க வேண்டாம் என்று ஊழியர்களை எச்சரித்துள்ளன.
இந்த நிறுவனங்களில் பாதுகாப்பு ஜாம்பவான்களான பிஏஇ சிஸ்டம்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ரேதியோன், லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் தேல்ஸ் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2023 ஜூலை மாதம் செங்டுவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் போது, ஜனாதிபதி ஜி ஜின்பிங் பார்வையிடும் பகுதிகளில் எலோன் மஸ்கின் டெஸ்லா கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |