சீனாவில் மீண்டும் கொரோனா அபாயம்: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பயணம் மேற்கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மற்ற நாடுகள் திணறி வந்த நிலையில், பெருந்தொற்று கட்டுப்படுத்திவிட்டதாக சீனா அறிவித்தது.
இதனிடையே, கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் புதிய பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் கிழக்கு விமான நிலையத்திலிருந்து பரவிய கொரோனா 20-க்கும் மேற்பட்ட நகரங்களிலும் 12-க்கும் அதிகமான மாகாணங்களிலும் பரவியுள்ளது.
சீனாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஜூலை 20-ஆம் தேதி, நாஞ்சிங் விமான நிலையத்தில் ஒன்பது பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, நாஞ்சிங் நகரில் சுற்றுலா தலங்கள், கலாசார மையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நகரில் வாழும் 9.2 மில்லியன் பேருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.