தங்கத்தை வைத்து அமெரிக்காவுக்கு சத்தமில்லாமல் அதிர்ச்சி அளித்த சீனா: விரிவான பின்னணி
சீனா தனது அன்னிய செலாவணி இருப்பை பல்வகைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க கருவூல பத்திரங்களை தொடர்ந்து விற்பனை செய்து, 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது.
தங்கத்தில் முதலீடு
இது அமெரிக்க பொருளாதாரத்திற்கும், டொலர் மதிப்புக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது. மட்டுமின்றி, அமெரிக்க கருவூல பத்திரத்திற்கு பதிலாக சீன அரசாங்கம் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.

வியாழக்கிழமை அமெரிக்க கருவூலத் துறையால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நவம்பர் 2025-ல் சீனாவின் அமெரிக்க கருவூல பத்திர இருப்பு 682.6 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
இது அக்டோபர் மாதத்தில் 688.7 பில்லியன் டொலராக இருந்தது. இந்த 682.6 பில்லியன் டொலர் அளவு என்பது 2008-க்குப் பிறகு பதிவான மிகக் குறைவான அளவாகும்.
அமெரிக்கக் கடன் பத்திரங்களில் வெளிநாட்டினரின் உரிமை சாதனை அளவை எட்டியிருந்த நிலையில், சீனா தனது அமெரிக்கப் பத்திரங்களின் இருப்பைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆனால் ஜப்பான் மற்றும் பிரித்தானியா தங்கள் இருப்பை அமெரிக்க கருவூல பத்திரத்தில் அதிகரித்துள்ளன. ஜப்பானின் இருப்பு 2.6 பில்லியன் டொலர் உயர்ந்து 1.2 டிரில்லியன் டொலராகவும், பிரித்தானியாவின் வைத்திருப்பு 10.6 பில்லியன் டொலர் உயர்ந்து 888.5 பில்லியன் டொலராகவும் உள்ளது.
உத்தியோகப்பூர்வ ஊடகத் தகவல்களின் அடிப்படையில், டிசம்பர் 2025 இறுதியில் சீனாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.3579 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, உலகின் மிகப்பெரிய அந்நியச் செலாவணி கையிருப்பாக உள்ளது.
பெரும் அச்சுறுத்தல்
அமெரிக்கப் பத்திரங்களில் சீனா தனது முதலீடுகளைக் குறைப்பது, தங்கம், அமெரிக்க அல்லாத நாணயங்கள் மற்றும் வெளிநாட்டுப் பங்கு முதலீடுகள் போன்ற பிற சொத்துக்களை நோக்கி தனது மூலோபாய கையிருப்பு ஒதுக்கீடுகளைச் சரிசெய்யும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கக் கடன் பத்திரங்களில் தனது முதலீடுகளைக் குறைத்து வரும் சீனா, தனது தங்க இருப்புகளை அதிகரிப்பதற்காக தனது அந்நியச் செலாவணி சொத்துக்களை மேலும் பல்வகைப்படுத்தி வருகிறது.
சீனாவின் மத்திய வங்கியான People's Bank of China வெளியிட்ட சமீபத்திய தரவின்படி, டிசம்பர் 2025 இறுதியில் சீனாவின் தங்க இருப்பு 74.15 மில்லியன் அவுன்ஸ் (2102.11 டன்) ஆக உள்ளது.
இது நவம்பர் மாதத்தை விட 30,000 அவுன்ஸ் அதிகமாகும். சீனா தனது கருவூலத்தில் தொடர்ச்சியாக 14வது மாதமாக தங்க இருப்பை அதிகரித்து வருகிறது.
இந்த நடவடிக்கை மூலம் சீனா தனது நாணயத்தின் மதிப்பையும், நிதி இருப்பையும் தங்கத்தின் வாயிலாக மேம்படுத்த முடிவு செய்துள்ளது. சீனாவின் இந்த முடிவு மற்ற நாடுகளுக்கும் முக்கியமான உதாரணமாக மாறி வரும் வேளையில் அமெரிக்காவுக்கும், அமெரிக்க கருவூல பத்திரத்திற்கும், டொலர் மதிப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என்றே கூறுகின்றனர்.
மேலும், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்களது பத்திர இருப்பை மொத்தமாக விற்பனை செய்வதாக மிரட்டினாலே போதும் ட்ரம்ப் தனது திட்டத்தில் பின்வாங்கிவிடுவார் என்ற கருத்தும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |