ஈரான் தொடர்பில் உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் அச்சுறுத்தால்: மொத்தமாக புறந்தள்ளிய சீனா
China denounces US threat: ஈரானுடனான வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டலைக் கண்டித்த சீனா.
ஈரானுடனான தங்களது வர்த்தகத்திற்கு அமெரிக்கா விதிக்கும் தடைகள் குறித்த அச்சுறுத்தலை சீனா கண்டித்துள்ளதுடன், அத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் கூறியுள்ளது.

மேலும், தங்களது தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் சீனா எச்சரித்துள்ளது.
ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் எந்தவொரு நாடும் அல்லது அமைப்பும் அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகளுக்கு (secondary sanctions) ஆளாக நேரிடும் என்ற அச்சுறுத்தலை சீனா நிராகரிக்கும் என்பது முன்னரே கணிக்கப்பட்டிருந்தது.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதத்தை சீனா வாங்குகிறது. மட்டுமின்றி ஈரானின் வருவாயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட முந்தைய முயற்சிகளையும் சீனா மீறியுள்ளது.
மேலும், ஈரானைத் தனிமைப்படுத்தும் முயற்சியில், சீனாவையும் அதன் நிதி அமைப்பையும் எதிர்கொள்வதில் ட்ரம்ப் நிர்வாகம் எந்த எல்லை வரை செல்லத் தயாராக இருக்கும் என்ற கேள்வியை அதன் எதிர்ப்பு அறிக்கை எழுப்பியுள்ளது.
திங்களன்று பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கையை விடுத்தபோது, ஈரானுடனான வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 60 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆரம்பக்கட்டத் தடைகளை அறிவித்தார்.
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்திற்கு நிதியளிப்பதில் ஈடுபட்டிருந்த போதிலும், அந்தப் பட்டியலில் சீன நிதி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், சீனா தொடர்பில் எந்த அறிவிப்பும் இடம்பெறாததன் காரணம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஊடகத்தினருக்கு பதிலளித்த ஸ்காட் பெசென்ட், நான் ஏன் உலகளாவிய நிதி அமைப்பைச் சீர்குலைக்க விரும்ப வேண்டும் என்றார்.
ஆனால், அடுத்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இடையே நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சீனா பதிலடி கொடுப்பதற்கான அபாயம் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் நன்கு அறிந்திருப்பதாக நிதி மற்றும் வர்த்தகத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஈரான் விவகாரத்தில் சீனாவை சீண்டினால், நிதிச் சந்தைகள் மூலமாகவோ அல்லது தனது முக்கிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு வரம்புகள் விதிப்பதன் மூலமாகவோ பதிலடி கொடுக்கக்கூடும்.
சீனாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சீனாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்போதுமே சர்வதேச சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டு வருகிறது, அதில் தலையிடவோ அல்லது இடையூறு செய்யவோ அனுமதிக்க முடியாது என்றார்.
மட்டுமின்றி, சட்டவிரோதமான மற்றும் ஒருதலைப்பட்சமான தடைகளைத் தாங்கள் உறுதியாக எதிர்ப்பதாகச் சீனா ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளது.
தங்களது உரிமைகளையும் நலன்களையும் உறுதியாகப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரினாலும் அதனுடன் இணைந்த அமெரிக்க முற்றுகையினாலும் ஈரான் பொருளாதார ரீதியாகப் பேரழிவுக்கு உள்ளானதாக மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்தாலும், முழுமையாகத் தனிமைப்படுத்தப்படும் என்ற பெசென்ட்டின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் தனது எதிர்ப்பைத் தொடர்ந்து வருகிறது.

பொருளாதாரத் துறை அமைச்சர் அலி மதானிசாதே அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கையில், எங்கள் பாதுகாப்பு என்பது இனி வெறும் தற்காப்பு சார்ந்ததாக மட்டும் இருக்காது; எதிரிகள் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றார்.
தற்போது 'பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கை' என்று பெசென்ட் பிரகடனப்படுத்தியுள்ளது, ஈரானுடனான மோதலுக்கு ஒரு தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் இன்னும் குறைவாகவே உள்ளன என்பதை உணர்த்துகிறது.
மேலும், ஈரானை பணிய வைக்கும் நோக்கம் நிறைவேறாத ஆறு மாத காலப் போருக்குப் பிறகு, இராணுவ நடவடிக்கையைக் கைவிட்டுப் பொருளாதார நடவடிக்கைகளை நோக்கிச் சாயும் போக்கையும் இது உணர்த்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |