ட்ரம்பின் வரி யுத்தம் ஒரு பக்கம்... மறுபக்கம் ஏற்றுமதியில் அதிரடி காட்டிய சீனா
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பால் உலகளாவிய வர்த்தகம் ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், 12.4 சதவீத ஏற்றுமதி அதிகரிப்பை சீனா பதிவு செய்துள்ளது.
சரிவடைந்துள்ளது
கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை ப்ளூம்பெர்க் ஆய்வில் கணிக்கப்பட்ட 4.6 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
மட்டுமின்றி இறக்குமதியும் 4.3 சதவீதம் சரிவடைந்துள்ளது என சீன அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் கடந்த மாதம் சுமார் ஐந்து சதவீத வருடாந்திர வளர்ச்சி இலக்கை நிர்ணயித்து, உள்நாட்டுத் தேவையை அதன் முக்கிய பொருளாதார உந்துசக்தியாக மாற்றுவதாக உறுதியளித்தனர்.
ஆனால் சீனாவின் பலவீனமான மீட்சி ட்ரம்பின் வர்த்தகப் போரிலிருந்து புதிய சிக்கல்களை எதிர்கொள்கிறது, இந்த மாதம் பெரும்பாலான சீனப் பொருட்களுக்கு மிகப்பெரிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீன இறக்குமதியை குறிவைத்து உலகளாவிய வரி தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி தொடங்கியதிலிருந்து, இரு நாடுகளும் வரி விதிப்பில் போட்டியிட்டு வருகிறது. சீனா மீது 145 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா மீது 125 சதவீத வரியை சீனா விதித்துள்ளது.
இந்த நிலையில், ஜனவரி முதல் மார்ச் வரையில் சுமார் 115.6 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்கா தங்களிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
தீவிர நடவடிக்கை
ஆனால் வரி விதிப்புக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டவையே தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் மாதங்களில் ஏற்றுமதி சரிவடையவும் வாய்ப்புள்ளதாக பிரபல நிறுவனமொன்றின் தலைவரும் தலைமை பொருளாதார நிபுணருமான Zhiwei Zhang தெரிவித்துள்ளார்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட சீனா, மந்தமான நுகர்வு மற்றும் அதன் கட்டுமானத் துறையில் நீண்டகால கடன் நெருக்கடியால் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில், பொருளாதாரத்தை மீண்டும் ஊக்குவிப்பதற்காக வட்டி விகிதங்களைக் குறைத்தல், வீடு வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்தல், உள்ளூர் அரசாங்கங்களுக்கான கடன் உச்சவரம்பை உயர்த்துதல் மற்றும் நிதிச் சந்தைகளுக்கான ஆதரவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தொடர்ச்சியான தீவிர நடவடிக்கைகளை சீனா கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |