60,000 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய வரம்பற்ற எரிசக்தி மூலத்தை கண்டுபிடித்த சீனா
சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் இருப்பது கண்டறியப்பட்டதால் அந்நாட்டின் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
10 லட்சம் டன் தோரியம் கண்டுபிடிப்பு
60,000 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய வரம்பற்ற எரிசக்தி மூலத்தை சீனா கண்டுபிடித்துள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள புவியியலாளர்கள் கூறியுள்ளனர். சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம் உள்மங்கோலியா ஆகும்.
இங்குள்ள பையுன் ஓபா பகுதியில் அரிய வகை தாதுக்கள் இருக்கின்றன. இந்த பகுதியில் 5 பெரிய சுரங்கங்களும் உள்ளன. இவற்றில் இருந்து இரும்பு உட்பட 175 வகையான தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் தோரியம் இருப்பு கண்டறிவதற்கான சோதனையை பல ஆண்டுகளாக சீன விஞ்ஞானிகள் நடத்தினர். தற்போது சோதனை நிறைவுற்று சீன அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், பையுன் ஓபா பகுதியில் சுமார் 10 லட்சம் டன் தோரியம் இருப்பதாக கணக்கிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் 60,000 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அணு மின் உற்பத்தியில் யுரேனியம், புளூட்டோனியம் தாதுக்களுக்கு அடுத்ததாக தோரியம் தாது இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், தோரியத்தை பயன்படுத்தினால் சுற்றுசூழலுக்கு பெரிதளவில் பாதிப்பு ஏற்படாது, மின்சார செலவும் குறையும்.
இதனை பயன்படுத்தி, உருகிய-உப்பு உலை எனப்படும் ஒரு வகை அணு மின் நிலையத்தை உருவாக்க முடியும். இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான ஆற்றலை வழங்க முடியும்.
தற்போது, அணு மின் சக்தி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையே போட்டி நிலவி வருகிறது. தற்போது, சீனாவில் தோரியம் கண்டுபிடிப்பால் நாட்டிற்கு இன்னும் பலமாக உள்ளது.
சீனாவில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தோரியம் அணு மின் நிலையம் வரும் 2029-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |