இது எங்கள் உள் விவகாரம்... ட்ரம்பிற்கு எதிராக சீறிய சீனா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய கருத்து ஒன்றால் உக்கிர கோபமடைந்துள்ள சீனா, தங்கள் உள்விவகாரத்தில் தலையிட எவரையும் அனுமதிக்க முடியாது என கொந்தளித்துள்ளது.
சீனாவின் உள் விவகாரம்
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் மீண்டும் மோசமடையத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்களே இதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது.
இது சீனாவை கோபம் கொள்ள வைத்துள்ளதுடன், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று ட்ரம்பை எச்சரித்தது. மட்டுமின்றி, சீனாவின் உள் விவகாரங்களில் எந்த சக்தியும் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது வரி விதித்த அமெரிக்கா, சீனாவை வரி விதிப்பில் இருந்து தவிர்த்தது. மட்டுமின்றி, சீனாவில் இருந்து அரிய கனிமங்கள் பெறும் திட்டத்தின் ஒருபகுதியாக சீனா மீதான வரி விதிப்பில் விலக்கு அளித்தும் வருகிறது.
இந்த நிலையிலேயே ஆகஸ்ட் 15ம் திகதி ட்ரம்ப் அளித்த நேர்காணல் ஒன்றில், தாம் ஆட்சியில் இருக்கும் மட்டும் தைவானை சீனா ஆக்கிரமிக்காது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தம்மிடம் கூறியதாக பதிவு செய்தார்.
பிரிக்க முடியாத பகுதி
ஆனால் அது உண்மைக்கு புறம்பானது என தற்போது சீனா அம்பலப்படுத்தியுள்ளது. ட்ரம்பின் கருத்து குறித்து சீனாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்,
தைவான் சீனப் பிரதேசத்தின் பிரிக்க முடியாத பகுதி என தெரிவித்துள்ளார். தைவான் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள் விவகாரம், தைவான் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது சீன மக்களின் விடயம் என்றும் மாவோ நிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைதியான ஒற்றுமைக்கான சாத்தியத்திற்காக சீனா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் ஆனால், தைவானை சீனாவிலிருந்து பிரிக்க யாரையும் அல்லது எந்த சக்தியையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தைவானை தங்களது பிரதேசமாகவே சீனா நிர்வாகம் கருதுகிறது. மட்டுமின்றி இராணுவ நடவடிக்கை தேவை என்றால் கூட தைவானை மீண்டும் ஒன்றிணைக்கவும் சீனா சபதம் செய்துள்ளது. ஆனால், சீனாவின் முடிவுகளுக்கு தைவான் நிர்வாகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |