சோளம், பருத்தி உட்பட... ட்ரம்புக்கு தகுந்த பதிலடி அளித்த சீனா
சீனப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்குப் பதிலடியாக, பல அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது.
15 சதவிகித வரி
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சோயாபீன்ஸ், சோளம், மாட்டிறைச்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் மீது சீனா 10 சதவிகித வரிகளை விதிக்கும்.
மார்ச் 10 முதல் சில அமெரிக்க இறக்குமதிகளுக்கு 10 முதல் 15 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கோழி, கோதுமை, சோளம், பருத்தி போன்ற பொருட்களுக்கு 15 சதவிகித வரி விதிக்கப்பட உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் செவ்வாயன்று சீன பொருட்கள் மீதான வரிகளை 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை உயர்த்தியதை அடுத்தே சீனா நிர்வாகம் இந்த புதிய வரிகளை விதித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரியும் விதித்தார். இதற்கு பதிலடியாக 107 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு கனடா வரி விதித்துள்ளது.
கூடுதல் வரி விதிக்கப்படும்
மேலும், 30 பில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்புகளுக்கு 25 சதவிகித வரி விதிப்பு செவ்வாய்கிழமை தொடங்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
21 நாட்களுக்குள் 125 பில்லியன் கனடிய டொலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, சாத்தியமான எதிர் நடவடிக்கைகள் குறித்து மெக்சிகோவும் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
அமெரிக்கா தனது வரி உயர்வுடன் முன்னோக்கிச் சென்றால், அதை எதிர்கொள்ள தங்களிடம் பல திட்டங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |