தைவானில் நான்சி பெலோசி விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவு? வெளியான முக்கிய பின்னணி
சீன ராணுவத்தால் நான்சி பெலோசி தாக்குதலுக்கு இலக்கானால் அது மூன்றாம் உலகப்போருக்கான துவக்கப் புள்ளியாக இருக்கும் என பீதி ஏற்பட்ட நிலையில், அதன் பின்னணி வெளியாகியுள்ளது.
நீண்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் ஒருவர் தைவான் சென்றுள்ளார். 82 வயதாகும் நான்சி பெலோசி தமது ஆசிய நாடுகளுக்கான பயணத் திட்டத்தை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் சீனா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மிரட்டலும் விடுத்தது.
ஆனால் எதையும் பொருட்படுத்தாத நான்சி பெலோசி, எந்த நாடுகளுக்கு எப்போது என்ற உத்தியோகப்பூர்வ பட்டியலை வெளியிட்டார், ஆனால் தைவான் பெயரை மட்டும் பட்டியலில் இடம்பெற செய்யாமல் பார்த்துக்கொண்டார்.
இருப்பினும், குறிப்பிட்ட வான் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்து, நான்சி பெலோசியின் பயணத்தை தடுக்க சீனா முயற்சிகள் மேற்கொண்டது. அத்துடன், சீனா அரசு சார்பு ஊடகங்கள் நான்சி பெலோசியின் பயணத்தை விமர்சித்துள்ளதுடன், அவரது விமானம் தாக்குதலுக்கு இலக்காகலாம் எனவும் மிரட்டியது.
மட்டுமின்றி, சீனாவின் பிரபல ஊடகவியலாளரான Hu Xijin எச்சரிக்கை விடுத்திருந்தார். நான்சி பெலோசியுடன், தைவானுக்கு அமெரிக்க ராணுவ விமானங்களும் செல்லும் என்றால், அது அத்துமீறல் எனவும், இன்னொரு நாட்டின் மீதான படையெடுப்பு எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பெலோசியின் விமானத்தை துரத்தியடிக்க சீன ராணுவத்திற்கு அனைத்து உரிமைகளும் உண்டு எனவும், முதலில் எச்சரிக்கை செய்யுங்கள் கண்டுகொள்ள மறுத்தால் சுட்டு வீழ்த்துங்கள் எனவும் Hu Xijin கொக்கரித்தார்.
ஆனால் சீன அரசு அதிகாரிகள் தரப்பில் அவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், 1914ல் Franz Ferdinand இளவரசர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் செர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் பிரகடனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதும், அதுவே முதல் உலகப்போருக்கு காரணமாக அமைந்ததும் நிபுணர்கள் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நான்சி பெலோசி மீதான தாக்குதல் அல்லது அவரது படுகொலைக்கு காரணமாகும் சூழல், 1914க்கு பின்னர் உலகம் சந்தித்திராத மிகப்பெரிய சர்வதேச நெருக்கடிக்கு வழிவகுக்கும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தைவான் மீது தாக்குதல் தொடுக்க சீனா முடிவு செய்தால் முதலில், அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் செயற்கைக்கோள்களை சீனா அழிக்கும் என்பது உறுதி என கூறுகின்றனர்.
இதனிடையே, சீனாவின் இறையாண்மை பாதுகாப்பு நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்கு அமெரிக்க தரப்பு பொறுப்பை ஏற்க வேண்டும் என சீனா வெளிவிவகார அமைச்சக செய்தித்தொடர்பாளர் Hua Chunying மிரட்டல் விடுத்துள்ளார்.