ஈரானுக்கு ஆபத்தான ஷாஹத் ட்ரோன்களைத் தயாரித்து உதவும் சீனா... வெளியான காணொளியால் பீதி
சீனாவில் ஆபத்தான ஷாஹத் ட்ரோன்கள் தயாரிப்பதாக காணொளி ஒன்று கசிந்துள்ள நிலையில், ஈரானுக்கு அந்த நாடு ரகசியமாக உதவுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஷாஹத் ட்ரோன்கள்
சீனாவின் Douyin பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்தே தொடர்புடைய காணொளி பகிரப்பட்டுள்ளது. அங்கே ஷாஹத் ட்ரோன்கள் ஒவ்வொரு பாகமாக இணைக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு காணொளியில், ஈரானின் மிக ஆபத்தான ஷாஹத் ட்ரோன்கள் போன்று பெரும் எண்ணிக்கையில் ஒரு கிடங்கில் காணப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஷாஹத் ட்ரோன்கள் சீனாவில் தயாரிக்கப்படுகிறது பாருங்கள் என பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Tom Tugendhat தெரிவித்துள்ளார்.
மேலும், இது ஆச்சரியத்திற்குரியதல்ல; ஆயினும், உக்ரேனியக் குழந்தைகளைக் கொன்று குவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு சீனா துணையாக நிற்கிறது என்பதை இது நினைவூட்டுகிறது என்றார்.
ஈரான், ரஷ்யாவிற்குத் தொழில்நுட்பத்தை விற்பனை செய்வதற்கு முன்பு, தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு சுமார் 6,000 'ஷாஹத்' (Shahed) ட்ரோன்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது.
ஈரான் பின்னர் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததும், ரஷ்யா பெரும் எண்ணிக்கையில் அந்த ட்ரோன்களை தயாரித்துக் கொண்டது. ஷாஹத்-136 ட்ரோன் ஒன்றின் உற்பத்தி செலவு 38,000 பவுண்டுகள் என்றே தெரிய வருகிறது.

ஆனால், 1.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 9M728 Iskander K க்ரூஸ் ஏவுகணையை விட இந்த ட்ரோன்கள் ஆபத்தானவை என்றே கூறுகின்றனர்.
மணிக்கு 180 கி.மீ பாயும் இந்த ட்ரோன்கள் சுமார் 2,500 கி.மீ வரையில் சென்று இலக்கைத் தாக்கும். ஷாஹத் ட்ரோன்களால் உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான இலக்குகளை ரஷ்யா தாக்கியுள்ளது.
பாதுகாப்பு அமைப்புகள்
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுத்ததன் பின்னர், ஆவேசமடைந்த ஈரான் இராணுவம், மத்திய கிழக்கின் மீது கண்மூடித்தனமாக இந்த நரகத்தை வாரி இறைத்து வருகிறது.
ஈரானின் ட்ரோன் படை, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன், மத்திய கிழக்கில் பாதுகாப்பு அரணாக இருப்பதாக கூறிவந்த அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் மொத்தம் சின்னா பின்னமானது.

இந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனாவுடன் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஏன் இராணுவ ரீதியாகவும் கூட நல்ல ஒத்துழைப்புடன் செயல்படுவதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஷாஹத் ட்ரோன்களால் மத்திய கிழக்கில் அமெரிக்கா நிறுவியிருந்த 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள தாட் வான் பாதுகாப்பு அமைப்பு மார்ச் முதல் வாரத்தில் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |