ட்ரோன் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுடன் அமெரிக்கா மீது தடைகளையும் விதித்த சீனா
அமெரிக்கா மற்றும் அதன் நிறுவனங்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.
சீன நிறுவனங்களைக் குறிவைத்து அமெரிக்கா சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, அமெரிக்கா மற்றும் அந்நாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
பதிலுக்குப் பதில்
தொழில்நுட்பத் துறையில் போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், ஆக்கபூர்வமான மற்றும் உத்திசார் ரீதியிலான ஸ்திரத்தன்மையைத் தக்கவைக்க உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளும் போராடி வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த மாதம் அமெரிக்காவில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்குச் சில வாரங்களே எஞ்சியிருக்க, இந்த பதிலுக்குப் பதில் என்ற வகையிலான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வளப் பகுப்பாய்வு நிறுவனம் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாகவும், அமெரிக்காவிற்கான ட்ரோன்கள் மற்றும் அது தொடர்பான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதாகவும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், உய்குர் மற்றும் பிற சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், 43 சீன நிறுவனங்களின் இறக்குமதிக்கு கடந்த வாரம் அமெரிக்கா தடை விதித்ததற்குப் பதிலடியாக, அந்த நிறுவனங்களில் ஆறு சீனாவின் எதிர் நடவடிக்கைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏழாவது நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருப்பது, பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படும் புதிய மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்கள் கொண்ட ரோபோக்கள் (humanoid and quadruped robots) மற்றும் மின்மாற்றிகள் (power converters) ஆகியவற்றின் இறக்குமதி மீது கடந்த மாதம் அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) விதித்த தடையுடன் தொடர்புடையதாக உள்ளது.
மட்டுமின்றி, சீனாவிற்குள் உள்ள அமைப்புகளும் மக்களும், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுடன் வணிகம் செய்வதிலிருந்தோ அல்லது ஒத்துழைப்பதிலிருந்தோ தடுக்கப்படுகிறார்கள்.
தேசியப் பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் தயாரித்த புதிய ட்ரோன் மொடல்கள் மற்றும் முக்கிய உபகரணங்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு அமெரிக்காவின் FCC அமைப்பு கடந்த டிசம்பரிலேயே தடை விதித்திருந்தது.
பிடிவாதமாக இருந்தால்
உலகின் மிகப்பெரிய ட்ரோன் உற்பத்தியாளரான சீனா, சமீபத்திய ஆண்டுகளில் தனது தயாரிப்புகள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகிறது.
புதன்கிழமை அன்று சீனா எடுத்த நடவடிக்கைகளில், வெளிநாட்டு கணினி மென்பொருள்களைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட அலுவலக உபகரணங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு விசாரணையைத் தொடங்குவதும், அமெரிக்காவுடனான சில தொழிற்சாலை கண்காணிப்பு ஆய்வு ஒத்துழைப்பை இடைநிறுத்துவதும் அடங்கும்.
சீன நிறுவனங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, அவசியமான எதிர் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர சீனாவிற்கு வேறு வழியில்லை என்றே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு எதிராகப் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதில் அமெரிக்கா பிடிவாதமாக இருந்தால், சீனா மேலும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டாய உழைப்பால் செய்யப்படும் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கடந்த மாதம் அமெரிக்கா 10 சதவீதம் அல்லது 12.5 சதவீதம் வரி விதித்த பல நாடுகளில் சீனாவும் ஒன்று.
மேலும், சீன செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாக ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் சமீபத்தில் அச்சுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |