ரஷ்யா- உக்ரைன் மோதலில் சீனா பகிரங்கமாக நடுநிலை வகிக்கிறது: சீன வெளியுறவுத்துறை
ரஷ்யா-உக்ரைன் மோதலில் நடுநிலை வகிப்பதாகவும், அமெரிக்காவின் வற்புறுத்தலை சீனா ஏற்றுக் கொள்ளாது எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், ரஷ்யா-உக்ரைன் மோதலில் சீனாவின் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், உக்ரைன் பிரச்சனையில் சீனா ஒரு ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிப்பதாகவும், மாஸ்கோவுடனான சீனாவின் உறவை மாற்றுவதற்காக அமெரிக்கா அழுத்தம் கொடுத்தாலோ அல்லது வற்புறுத்தினாலோ சீனா அதனை நிராகரிக்கும் எனவும், உக்ரைன்-ரஷ்யா பிரச்சனையில் சீனா பகிரங்கமாக நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜாவோ லிஜியன், 'நெருக்கடியான நிலைமையை தணித்து அமைதியை மீண்டும் நிலைநாட்ட பெய்ஜிங் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சீனாவுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்களை நாங்கள் எதிர்க்கிறோம். எந்த அழுத்தத்தையும் வற்புறுத்தலையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.
சீனாவின் கூற்றுக்கள் வரலாற்றின் வலது பக்கத்தில் உள்ளன என்பதை காலம் சொல்லும். சீனா ஆரம்பத்தில் இருந்தே உக்ரைனில் உள்ள மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான உரிமை மற்றும் ரஷ்யாவின் சட்டபூர்வமான பாதுகாப்பு, கவலைகள் இரண்டையும் உறுதிப்படுத்தியுள்ளது. அது ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது.
உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் மேம்பாடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி மாஸ்கோவுடன் இணைந்துள்ளது. மேலும், பெய்ஜிங்கின் உயரதிகாரிகள் ரஷ்யாவைக் கண்டிக்கும் ஐநாவின் தீர்மானங்களை எதிர்த்தனர் அல்லது விலகினர்' என தெரிவித்துள்ளார்.