சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பு... புடின், கிம் ஜோங் உன் சிறப்பு விருந்தினர்
அடுத்த வாரம் சீனா முன்னெடுக்கும் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பில் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
80வது ஆண்டு நிறைவு
குறித்த தகவலை சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் வியாழக்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 3 ஆம் திகதி பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.
ஜப்பானின் முறையான சரணடைதலைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நினைவு தின நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறது.
இந்த விழாவில் வடகொரியத் தலைவர் கலந்துகொள்ள இருப்பதை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனமான KCNA உறுதி செய்துள்ளது. 2019க்கு பிறகு கிம் ஜோங் உன் சீனாவிற்கு பயணப்படுவது இதுவே முதல் முறை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க நேச நாடுகளையும் கூட்டணிகளையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நேரத்தில் சீனா தனது இராணுவ வலிமையை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளது என்றே கூறப்படுகிறது.
இந்தியாவின் நரேந்திர மோடி
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உட்பட மொத்தம் 26 வெளிநாட்டு ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்றே தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியாவின் நரேந்திர மோடி, செப்டம்பர் 3 ஆம் திகதி நடக்கும் இராணுவ அணி வகுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், மியான்மர் ராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங் சிறப்பு விருந்தினர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளார்.
இந்த இராணுவ அணிவகுப்பில் 10,000 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான மேம்பட்ட ஆயுதங்களின் வரிசையும் இடம்பெற உள்ளது. சீன இராணுவத்தின் வளர்ச்சியை உலக நாடுகளுக்கு வெளிக்காட்டவே இந்த முன்னெடுப்பு என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |