சீனாவில் முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: வீட்டை சுற்றி வளைத்த சாலைகள்!
சீனாவின் ஜின்ஸி பகுதியில் நடைபெற்ற ஒரு நெடுஞ்சாலை திட்டம், ஒரு முதியவரின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியுள்ளது.
புதிய சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அப்பகுதியில் வசித்த பெரும்பாலானோர் அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டை ஏற்றுக்கொண்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால், ஹுவாங் பிங் என்ற முதியவர் மட்டும் தனது பழைய வீட்டை விட்டுப் பிரிய மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனது பேரனுடன் அந்த வீட்டிலேயே காலம் கழிக்க விரும்பிய ஹுவாங் பிங், அரசாங்க அதிகாரிகளின் எந்தவொரு முயற்சிகளையும் பொருட்படுத்தவில்லை.
கோடிக்கணக்கான இழப்பீட்டுத் தொகை, புதிய நிலம் என அவர்களின் அனைத்து சலுகைகளையும் நிராகரித்துள்ளார்.
இறுதியில், அரசாங்கம் வேறு வழியின்றி நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளை தொடங்கியது.
ஹுவாங் பிங்கின் வீட்டைச் சுற்றி மட்டுமே சாலை வேலைகள் நிறுத்தப்பட்டன.
ஆனால், காலப்போக்கில் சாலைப் பணி முடிவடைந்ததும், ஹுவாங் பிங்கின் வீடு ஒரு தனி தீவில் போல் தனித்து நிறுத்தப்பட்டது.
வாகனங்களின் சத்தம், தூசி என அவரது வாழ்க்கை நரகத்துக்கு சமமாக மாறியுள்ளது.
தற்போது, தனது முடிவை நினைத்து வருந்தும் ஹுவாங் பிங், "அப்போது அரசாங்கம் சொன்னது சரிதான் போல. இப்படி ஒரு நிலை வரும் என்று எனக்குத் தெரியாது. இனிமேல் இந்த வீட்டில் இருப்பது சாத்தியமில்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஹுவாங் பிங்கின் வீடு, தனி மனிதனின் வாழ்க்கையும், ஒரு பெரிய திட்டமும் மோதும்போது என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |