மத்திய கிழக்குக்காக... சீனா முன்வைக்கும் 4 அம்ச அமைதித் திட்டம்
மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்துவதற்காக, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நான்கு அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு கட்டமைப்பு
பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறு குறித்து அமெரிக்காவும் ஈரானும் முடிவு செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், செவ்வாயன்று அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனான சந்திப்பின்போது ஜி ஜின்பிங் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
இந்தத் திட்டம் நான்கு அம்சங்களை முன்மொழிகிறது. முதலாவதாக, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாப் பிராந்திய நாடுகளிடையே அமைதியான சகவாழ்வுக் கொள்கை. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாப் பகுதிகளுக்கு ஒரு நீடித்த பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுவதற்காக, நாடுகள் தங்கள் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாவதாக, தேசிய இறையாண்மை எனும் கோட்பாட்டை நாடுகள் மதிக்க வேண்டும் என்றும், அது மீறப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாப் பகுதிகளில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூன்றாவதாக, உலகம் மீண்டும் குழப்ப நிலைக்குத் திரும்புவதைத் தடுக்க, ஐ.நா.வை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பை உறுதியாக நிலைநிறுத்துவது இன்றியமையாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, அனைத்து நாடுகளும் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் இணைக்க முயற்சிக்க வேண்டும் என்றும், பிராந்திய முன்னேற்றத்தை வலுப்படுத்த சீனா தனது நவீனமயமாக்கல் முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் ஜி கூறியுள்ளார்.
இதனிடையே, செவ்வாயன்று ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டது தொடர்பாக, அமெரிக்காவின் நடத்தையை ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயல் என சீனா குற்றம் சாட்டியது.
பதிலடி நடவடிக்கை
கடந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வளைகுடாவில் உள்ள ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களை மூழ்கடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து ஈரான், முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை அதிரடியாக மூடியுள்ளதுடன், சீனா போன்ற, அது நட்பு நாடுகள் எனக் கருதும் நாடுகளுக்குச் சேவை செய்யும் கப்பல்களை மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கிறது.

இதனிடையே, ஈரானுக்கு இராணுவ உதவிகள் வழங்கினால், சீனா மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஆனால் ஈரான் விவகாரம் தொடர்பில் வெளியாகும் தகவல் இட்டுக்கட்டியது என்றும்,
சீனா மீது கூடுதல் வரிகளை விதிப்பதற்கு இதை ஒரு சாக்காகப் பயன்படுத்த அமெரிக்கா வலியுறுத்தினால், சீனா நிச்சயமாக உறுதியான பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும் என சீன வெளிவிவகார அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |