சீனா பயணிகள் விமானம் தலைகீழாக பாய்ந்ததன் மர்மம்: பதைபதைக்க வைக்கும் வீடியோ
சீனாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில், 30,000 அடியில் இருந்து தலைகீழாக பாய்ந்ததன் மர்மம் தொடர்பில் நிபுணர்கள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த மொத்த பயணிகளும் மரணமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, 30,000 அடியில் இருந்து தலைகீழாக பாய்ந்ததன் மர்மம் தொடர்பில் நிபுணர்கள் சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
அதில், அதிக உயரத்தில் விமானம் பறந்த நிலையில், சில வேளை கட்டுப்பாட்டை திடீரென்று இழந்திருக்கலாம் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முக்கியமான கருவிகள் செயலற்றுப் போவதாலும், இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எஞ்சின் சக்தி இல்லாமல் விமானம் நன்றாகப் பறக்க முடியும் என்பதால் இது எஞ்சின் தொடர்பான கோளாறாக இருக்க வாய்ப்பில்லை எனவும் குறித்த நிபுணர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 முதல் 2020 வரையன காலகட்டத்தில் ஏற்பட்ட விமான விபத்துகளில் 13% பயணத்தின் போது ஏற்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 28% விமான நிலையத்தை நெருங்கும் நிலையில் விமான விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், 26% தரையிறங்கும் நிலையில் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, வழக்கமாக பயணத்தின் ஒருகட்டத்தில் விமானம் ஆட்டோ பைலட்டில் இருக்கும். அதனால் என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்வது மிகவும் கடினம் என சீனா நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விபத்து நடந்த பகுதியில் இருந்து கருப்பு பெட்டியை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. விமானத்தின் இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள பல மாதங்கள் ஆகலாம் என்றாலும், என்ன நடந்தது என்பதை விரைவில் கண்டறிய சீன அதிகாரிகளுக்கு அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.