வெனிசுலாவை அடுத்து ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு இலக்கான நாடு... சீனா அளித்த வாக்குறுதி
அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் கியூபாவிற்கு ஆதரவையும் உதவியையும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.
ஆதரவாக சீனா
வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோவை ஆட்சியில் இருந்து நீக்கி, கைது செய்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், அடுத்து கியூபா மீது தொடர்ச்சியாக நெருக்கடி அளித்து வந்தது. இந்த நிலையிலேயே, அதிரடி திருப்பமாக கியூபாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கியுள்ளது.

சீனாவும் கியூபாவும் நீண்டகாலமாக சோசலிச நேச நாடுகளாகும். மேலும், அமெரிக்காவால் பல தசாப்தங்களாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை சீன நிர்வாகம் தொடர்ச்சியாக எதிர்த்தும் வந்துள்ளது.
இதனிடையே, கியூபாவின் வீழ்ச்சி உறுதி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்த மாதம் பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கியூபாவிடம் ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் அல்லது வெனிசுலாவைப் போன்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அதிரடி திருப்பமாக சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செவ்வாயன்று வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்,
கியூபா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சீனா தனது ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது எனவும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நிறுத்துமாறு அமெரிக்காவை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியை வீழ்த்த
அத்துடன், கியூபாவிற்கு எதிரான முற்றுகையையும் தடைகளையும் உடனடியாக நீக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்துவதாகயும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கியூபாவிற்கு முடிந்தவரை அதிக ஆதரவையும் உதவியையும் சீனா தொடர்ந்து வழங்கும் என்றார். முன்னதாக, கியூபாவிற்குள் நுழையும் அனைத்து எண்ணெய் இறக்குமதிகளையும் நிறுத்துவதற்காக, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு கடற்படை முற்றுகையை பரிசீலித்து வருவதாக பொலிடிகோ கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.

மேலும், எண்ணெய் இறக்குமதியை முடக்கினால், அந்த ஆட்சியை வீழ்த்த முடியும் என ட்ரம்ப் நிர்வாகத்தின் முதன்மை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்ததாகவும் பொலிடிகோ தனது செய்தியில் பதிவு செய்திருந்தது.
இதனிடையே, கியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல் சனிக்கிழமையன்று இராணுவப் பயிற்சிகளை மேற்பார்வையிட்டார். அமெரிக்காவிலிருந்து ஏற்படக்கூடிய சாத்தியமான ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக இந்தப் பயிற்சிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |