பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கல்- சீனாவின் கடும் எதிர்ப்பு
பிரிட்டிஷ் ஸ்டீல் நிறுவனத்தை தேசியமயமாக்கியுள்ள பிரித்தானிய அரசின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“இந்த நடவடிக்கை, சீனாவின் ஜிங்க்யே குழுமத்தின் சட்டபூர்வ உரிமைகளை மீறுகிறது” என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்கன்தோர்ப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் ஸ்டீல் தொழிற்சாலை கடந்த ஆண்டு பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், அது தொடர்ந்து சீனாவின் ஜிங்க்யே குழுமத்தின் சொந்தமாக இருந்ததால், அரசின் முடிவெடுக்கும் அதிகாரம் குறைந்திருந்தது.
தற்போது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், அரசு முழுமையாக தேசியமயமாக்கியுள்ளது.

“இது வேலைவாய்ப்புகளை பாதுகாக்கவும், நாட்டின் முக்கியமான உற்பத்தித் திறனை காப்பாற்றவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஸ்டீல் தினமும் 700,000 பவுண்டு இழப்பை சந்தித்ததாகவும், தற்போது அரசுக்கு தினமும் 1.3 மில்லியன் பவுண்டு செலவாகிறது என்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வர்த்தக அமைச்சகம், “இது சீன நிறுவனங்களின் நம்பிக்கையை பாதிக்கிறது. பிரித்தானிய அரசு, சீனாவுடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. இந்த முடிவு, லண்டன்-பீஜிங் உறவுகளை மேலும் பதற்றப்படுத்தும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், புதிய பிரதமராக ஆன்டி பர்னாம், சீனாவுடன் பொருளாதார உறவுகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பிரிட்டிஷ் ஸ்டீல் தொழிற்சாலை சுமார் 2,700 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. பிரித்தானியா, பெரும்பாலான எக்குவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
ஸ்கன்தோர்ப் தொழிற்சாலை மூடப்பட்டால், பிரித்தானியா, G7 நாடுகளில், புதிய ஸ்டீலை உற்பத்தி செய்ய முடியாத ஒரே நாடு என்ற நிலைக்கு தள்ளப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |