மறுபடியும் முதல்லேந்தா? சீனாவில் மறுபடியும் தலைதூக்கும் கொரோனா... அரசு முக்கிய உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து சீனாவின் முக்கிய நகரில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் பின்னர், பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ் உயிர் சேதங்களையும் பொருட் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
டெல்டா, ஓமைக்ரான் என கொரோனா வைரஸ் புதிய புதிய திரிபுகளாக மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது.
தற்போது பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பைஸ் நகரில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனினும், ‘ஜூரோ கோவிட் கொள்கை’யில் சீனா தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக பைஸ் நகரில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக சாலைகளில் சிவப்பு விளக்கு மட்டும் எரியும் விதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வியட்நாம் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைஸ் நகரின் நகர்ப்புற பகுதிகளில் 14 லட்சம் மக்களும் கிராமப்புற பகுதிகளில் 30 லட்சம் மக்களும் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.