மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் தூண்டப்படலாம்... சீனா எச்சரிக்கை
மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் தூண்டப்படலாம் என எச்சரித்துள்ளது சீனா!
தென் சீனக்கடலில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்பும் சீனா, தைவான் நாட்டை எப்படியாவது கைப்பற்றிவிடவேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் ஜப்பான் முதலான ஆறு நாடுகள் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் கூட்டாக போர் ஒத்திகையில் ஈடுபட்ட விடயம் சீனாவை கடுமையாக எரிச்சலைடைய வைத்துள்ளது.
இதற்கிடையில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பு தொடர்பில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் வேறு சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியா தைவானுக்கு உதவினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளதாக The Global Times பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையிலான கூட்டுறவு குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ள சீனா, தைவானுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவுடன் போரிட சீன மக்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தைவான் நெருப்புடன் விளையாடுவதாக தெரிவித்துள்ள சீனா, தைவானைக் கைப்பற்றுவது தவிர்க்க இயலாத ஒரு விடயம் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து சுமார் 150 சீன போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் ஊடுருவியுள்ளன.
அதைத் தொடர்ந்து, சீனாவும் அதன் அதிபரும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ள தைவான் அதிபர் Tsai Ing-wen, தனது குடியாட்சிக்கும் மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், தன்னைத் தற்காத்துக்கொள்ள தைவான் என்ன வேண்டுமென்றாலும் செய்யும் என்று கூறியுள்ளார்.