இல்லாத 34வது மாடிக்கு ரூ.16 லட்சம் கட்டிய நபர்: பொய்த்துப் போன சொந்த வீடு கனவு: மோசடி
சீனாவில் இல்லாத வீடு ஒன்றிக்கு பணம் செலுத்தி ஷென் என்ற நபர் சுமார் 16 லட்சத்தை ஏமாந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சொந்த வீடு கனவு
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜியான் நகரில் ஷென் என்ற நபர் 34-வது மாடியில் உள்ள 90 சதுர மீட்டர் கொண்ட அபார்ட்மெண்ட் வீடு ஒன்றிக்கு கடந்த 2013ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கட்டிட நிறுவனம், இது வரையறுக்கப்பட்ட சொத்து உரிமைகள் கொண்ட ஒப்பந்தம் என்றும், சந்தை மதிப்பில் இருந்து மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஒரு அபார்ட்மெண்டின் விலை என்றும் விளம்பரப்படுத்தியுள்ளது.

குறைந்த விலையில் அபார்ட்மெண்ட் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஷென் அந்த கட்டிட நிறுவனத்திற்கு 1,17,700 யுவானை(இந்திய ரூபாய் மதிப்பில் 16 லட்சம்) முன் பணமாக செலுத்தியுள்ளார்.
வரையறுக்கப்பட்ட சொத்து உரிமைகள் என்பது சீனாவின் கிராம புறங்களில் சட்டவிரோதமாக கட்டப்படும் வீடுகள் ஆகும், இவற்றிக்கு எந்தவொரு சட்டப்பூர்வமான பாதுகாப்பும் கிடைக்காது.
ஆனால் கட்டிட நிறுவனமானது தங்கள் வாடிக்கையாளர்களிடம் எதிர்காலத்தில் அனைத்து சட்ட ஆவணங்கள் பெற்று தருவோம் என்று உறுதியளித்துள்ளது.
இல்லாத 34 வது மாடிக்கு பணம் செலுத்திய நபர்
கடந்த 2017-லில் கட்டிட பணிகள் முடிந்த போது அபார்ட்மெண்டில் வெறும் 32 மாடிகள் மட்டுமே இருந்தது ஷெனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசிய போது, 34வது தளம் இல்லை என்றும், அதற்கு பதிலாக 32 வது தளத்தில் ஒரு வீட்டை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதற்கான முழு தொகையையும் ஷென் உடனடியாக செலுத்த தவறியதை அடுத்து, அந்த வீட்டையும் வேறு நபருக்கு அந்த நிறுவனம் விற்பனை செய்து விட்டது.
தான் செலுத்திய முன்பணத்தை திருப்பி தருமாறு ஷென் கோரிய நிலையில் அவரை அந்த நிறுவனம் அலைகழித்துள்ளது.
பல ஆண்டுகள் போராட்டம் நடத்தியும் வெறும் 70000 யுவானை மட்டுமே அவரால் திரும்ப பெற முடிந்துள்ளது.
மீது தொகையை பெறுவதற்கான போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவிலும் ஷென்னிற்கான மீதி தொகை மற்றும் அதற்கான வட்டியை திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் மே 2026 வரை ஷென்னிற்கு அவரது பணம் திரும்ப கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |