தனது பூனையை பார்த்துக்கொள்பவருக்கு மொத்தச் சொத்தையும் பரிசாக அறிவித்த 82 வயது முதியவர்
தன் மரணத்திற்குப் பின் தனது செல்லப்பிராணியான பூனையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்பவருக்கு தனது மொத்த சொத்தையும் எழுதிவைப்பதாக அறிவித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த முதியவர்.
சீனாவின் குவாங்க்டாங் மாகாணத்தில் வாழும் 82 வயதான லாங் (Long), தனது இறுதி நாட்களை தனிமையில் கழித்து வருகிறார்.
அவருக்கு குழந்தைகளும் இல்லை, 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியையும் இழந்துவிட்டார்.
ஆனால் அவரது வாழ்க்கையில் ஒளியூட்டியது, சில தெரு பூனைகள். தற்போது அவற்றில் சியன்பா (Xianba) என்ற ஒரே பூனைதான் அவருடன் இருக்கிறது.
தனது மரணத்திற்கு பிறகு சியன்பாவை யார் கவனிப்பார்கள் என்பது அவரது மிகப்பெரிய கவலையாக உள்ளது.
அதற்காக, அவர் மிக அரிய முடிவெடுத்துள்ளார். தனது வீடும், சேமிப்புகளும் உட்பட்ட அனைத்து சொத்துகளையும் சியன்பாவை நேசித்து, வாழ்நாள் முழுக்க பராமரிக்கக்கூடிய நபருக்கே வழங்கவிருக்கிறார்.
“அவளைக் கவனமாக பார்த்துக் கொள்வதே எனது ஒரே கோரிக்கை,” என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பக்குவமடைந்துள்ள செல்லப்பிராணி கலாசாரம் தற்போது ஒரு பில்லியன் டொலர் தொழில்துறையாக மாறியுள்ளது. 2024-இல் மட்டும் இந்தத் துறையின் மதிப்பு 42 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு, ஷாங்காயில் உள்ள ஒரு மூதாட்டி, தனது 2.8 மில்லியன் டொலர் சொத்துக்களை பிள்ளைகள் கவனிக்காததால் பூனைகள் மற்றும் நாய்களுக்கு பரிசளிக்க தீர்மானித்தார்.
இந்த செய்திகள், மனிதம் மற்றும் விலங்குகளுக்கு இடையே உள்ள உணர்பூர்வமான பிணைப்பை மேலும் வலியுறுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |