சீனாவின் அந்த வலுவான நகர்வு... அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு பாதகம்
ஆர்க்டிக் பகுதியில் சீனாவின் வலுவான அதிரடி நகர்வுகள் குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தற்போது மிகுந்த கவலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியாயமானவை
இந்தக் கோடையில், சீனாவின் ஆராய்ச்சி நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்முறையாகப் பனிப்பாறைக்குக் கீழே ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் பயணம் செய்து சாதித்துள்ளதே, அமெரிக்க தரப்பின் கவலைகளுக்கு காரணம்.

சீனா முன்னெடுத்துள்ள இத்தகைய பயணங்கள் உருகும் பனிக்கட்டிகளுக்கு அடியில் உள்ள இயற்கை வளங்கள் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கக்கூடும்.
மட்டுமின்றி, வணிகக் கப்பல்களுக்கான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா உட்பட சாத்தியமான இலக்குகளுக்கு மிக அருகில் நிலைநிறுத்துவதற்கு இந்தத் தரவுகள் உதவும்.
அத்துடன், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் சீனக் கப்பல்களும் பெரும்பாலும் இராணுவ உளவு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், ஆர்க்டிக் பகுதியில் தங்களது நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவை மற்றும் சட்டப்பூர்வமானவை என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், இப்பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களித்து வருவதாக விளக்கமளித்துள்ளது.

இருப்பினும் சீனாவின் இந்த வலுவான நகர்வுகள் தொடர்பில் வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். கடல் மற்றும் காலநிலை அறிவியலில் சீனா முன்னணியில் இருக்க இலக்கு வைத்துள்ளது, ஏனெனில், கடலையும் காலநிலையையும் புரிந்துகொள்வது, கடற்படை நடவடிக்கைகளில், குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போரில் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணியாக அமைகிறது.
சீனா, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு வழிகாட்டவும், அவை கண்டறியப்படுவதைத் தவிர்க்க உதவவும் கணினி மாதிரிகளை உருவாக்குவதற்காக, உலகின் பெருங்கடல்களைப் பற்றிய தரவுகளைத் திரட்டி வருகிறது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ரஷ்யாவுடன் இணைந்து
தொடர்புடைய நீர்மூழ்கிக் கப்பல்களின் இந்தச் சாதனை, High North பகுதிக்குள் தனது இராணுவத் திறன்களை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் முயற்சிகளின் சமீபத்திய உதாரணம் என்று தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது வாதிடுகின்றனர்.
மட்டுமின்றி, ஆர்க்டிக் வழியாக எதிர்கால கடல் பாதைகளை உலகளாவிய வர்த்தகத்திற்கான குறுக்குவழியாக சீனா கருதுகிறது, கோடை காலத்தில் வட துருவத்தைத் தவிர்த்து, போலந்தின் க்டான்ஸ்க் துறைமுகத்திற்கு ஒரு சரக்குக் கப்பலை அனுப்பி அதை உறுதி செய்துள்ளது.

அந்தப் பாதை சூயஸ் கால்வாய் வழியாகச் செல்வதை விட இரு மடங்கு வேகமானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் அதன் பிறகு, ரஷ்யாவுடன் இணைந்து ஆர்க்டிக் பகுதி வழியாக சரக்கு போக்குவரத்தை, குறிப்பாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தை, விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அடுத்த சில ஆண்டுகளுக்குள் சீனாவால் ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை வட துருவத்திற்கு அனுப்ப முடியும் என்று இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு எதிர்பார்க்கிறார்கள்.

சீனாவுடன் இந்த முயற்சிகள் அனைத்திற்கும் ரஷ்யாவும் பங்களித்து வருவதாகவே நம்பப்படுகிறது. இந்த நிலையில், சீனா மற்றும் ரஷ்யாவால் பசிபிக் பகுதியில் உள்ள அச்சுறுத்தல் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது என அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு பிரான்ஸ் இராணுவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அட்லாண்டிக் பெருங்கடலில் ஆசியப் படைகள் குவிக்கப்பட்டால், அது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |