ஈரானிய எண்ணெயை வாங்கிய சீன நிறுவனம்: அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவும் ஈரானும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கப் போராடி வரும் நிலையில், பல பில்லியன் டொலர் மதிப்புள்ள ஈரானிய எண்ணெயை வாங்கியதற்காக, சீன சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.
40 கப்பல் நிறுவனங்கள்
ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒன்றான Hengli நிறுவனம் மீதே அமெரிக்காவின் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

மட்டுமின்றி, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவும் சுமார் 40 கப்பல் நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீதும் ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.
கடந்த வருடம் சீனாவின் முதன்மையான மூன்று நிறுவனங்கள் மீதும் ஈரான் எண்ணெய் விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்திருந்தது.
இது, கச்சா எண்ணெயைப் பெறுவது மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வெவ்வேறு பெயர்களில் விற்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட சில சிக்கல்களை சுத்திகரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தியது.
ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானதை சீனா வாங்குகிறது. மேலும், அமெரிக்க நிதியமைப்புடன் மிகக் குறைந்த அளவிலேயே தொடர்பைக் கொண்டுள்ளதால், அமெரிக்கத் தடைகளின் முழுமையான தாக்கத்திலிருந்து சுயாதீன சுத்திகரிப்பு நிலையங்கள் ஓரளவுக்கு விலக்கு பெற்றிருப்பதாகத் தடைகள் தொடர்பான நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
நிதிசார் நெருக்குதல்
ஆனால், எண்ணெய் வாங்க நிதியுதவி செய்யும் சீனாவின் வங்கிகள் மீது தடைகளை விதிப்பது, ஈரானிய எண்ணெய் கொள்முதலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே இந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இதனிடையே, ஈரான் அரசாங்கத்தின் மீது அமெரிக்கா ஒரு நிதிசார் நெருக்குதலைச் செலுத்தி வருவதாக கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.

மட்டுமின்றி, உலகச் சந்தைகளுக்குத் தனது எண்ணெயைக் கொண்டு செல்ல ஈரான் சார்ந்திருக்கும் கப்பல்கள், இடைத்தரகர்கள் மற்றும் வாங்குபவர்களின் கூட்டமைப்பை, கருவூலத் துறை தொடர்ந்து சுருக்கி வருவதாகவும் பெசென்ட் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |