கட்டுப்பாடுகள் தளர்வு... வெளிநாடுகளுக்கு படையெடுக்க தயாராகும் சீன மக்கள்
கொரோனா தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல தயாராவதாக சீன மக்கள் குதூகலத்துடன் தெரிவித்துள்ளனர்.
கடுமையான கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகளாக சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ஜனவரி 8ம் திகதி முதல் நாட்டுக்குள் வரும் பயணிகள் எவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக மாட்டார்கள் என சீன நிர்வாகம் அறிவித்துள்ளது.
@afp
மட்டுமின்றி, நாடுதழுவிய மக்கள் போராட்டத்தின் பயனாக, கடும்போக்கு விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தொற்று பரவல் தொடர்பில் நுணுக்கமாக நடவடிக்கை முன்னெடுக்கவும் முடியாத சூழல் என அதிகாரிகள் கூறிவருகின்றனர். இருப்பினும், 2020 மார்ச் மாதத்தில் இருந்து அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் மொத்தமாக தளர்த்தப்பட்டதில் மக்கள் மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளனர்.
10 மடங்கு அதிகரித்துள்ளது
27 வயதான Fan Chengcheng தெரிவிக்கையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்ட பயணத்தை இனியேனும் முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஷாங்காய் பகுதியில் வசிக்கும் நபர் கூறுகையில், பிரிட்டனில் வசிக்கும் தமது பெற்றோர்கள் இனி எளிதாக தங்களை வந்து சந்திக்க முடியும் என்றார்.
@afp
சீனா இறுதியாக சகஜ நிலைக்கு திரும்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இணையத்தில் சுற்றுலா தொடர்பில் தேடப்படுவது 850% அதிகரித்துள்ளதாகவும், விசா தொடர்பிலான விசாரணை 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பலர் மக்காவ், ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதும் தெரியவருகிறது.