வைரமுத்து மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழியிடம் சீறிய சின்மயி
பத்ம சேஷாத்திரி பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறும் கனிமொழி, வைரமுத்து மீது தான் உள்ளிட்ட பலர் அளித்த புகார் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாடகி சின்மயி கேள்வியெழுப்பியிருக்கிறார்.
சென்னை கே.கே.நகரில் செயல்படும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழியும் டுவிட்டர் வாயிலாக வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து ராஜகோபாலனை பொலிசார் கைது செய்த நிலையில் அவர் மீது போக்சோ, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
I truly hope, maam, you will do the needful regarding my and 16 other women’s harassment allegations on Mr Vairamuthu.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 24, 2021
Fact remains, inspite of an Interim Injuction, Mr. Radha Ravi and his clique continue to ban me from work.
I don’t know how my issue doesn’t qualify. https://t.co/xZMXw2vG4d
இதனிடையே, இந்த விவகாரம் மக்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த பாடகி சின்மயி தனது ட்விட்டர் பதிவில் திமுக எம்.பி. கனிமொழி பத்மஷேசாத்ரி பள்ளி தொடர்பாக பதிவிட்டிருந்த ட்வீட்டை டேக் செய்து கூறியுள்ளதாவது, உண்மையிலேயே நீங்கள் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இதே போல் நான் உட்பட 16 பெண்கள் வைரமுத்து மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாகவும் தேவையான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் இந்த விவகாரத்தில் நடிகர் ராதாரவி அவருக்கு நெருக்கமானவர்களும் தலையிட்டு தன்னை எந்த பணியும் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பத்மசேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் தாங்கள், என்னுடைய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.