மரண தண்டனையின்போது உயிர் தப்பிய பெண்: அவசர கோரிக்கை
Christa Pike being isolated behind bars: மரண தண்டனையின்போது உயிர் தப்பிய கிறிஸ்டா பைக் என்னும் பெண், சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண தண்டனையின்போது உயிர் தப்பிய பெண்ணொருவர் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ள நிலையில், அரசுக்கு அவசர கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றும்போது...
அமெரிக்காவில், கிறிஸ்டா பைக் (Christa Pike, 50) என்னும் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

கிறிஸ்டா பைக், தனக்கு 18 வயதே இருக்கும்போது, தனது காதலனான டாடரில் ஷிப் (Tadaryl Shipp, 17) என்னும் இளைஞருடன் சேர்ந்து, கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்னும் 19 வயது இளம்பெண்ணை, சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்தார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி, சாட்சியங்கள் சூழ்ந்திருக்க, கிறிஸ்டாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக, அவரது உடலில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால், இரண்டு முறை ஊசி மூலம் மருந்தைச் செலுத்தியும் அவர் உயிரிழக்கவில்லை.
அவசர கோரிக்கை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்டா, சிகிச்சைக்குப் பின் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கிறிஸ்டா ஏற்கனவே 28 ஆண்டுகள் தனிமைச்சிறையில் வாடிய நிலையில், 2024ஆம் ஆண்டு, அவரது தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது.
ஆனால், சிறையில் தற்போது மீண்டும் கிறிஸ்டா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது 2024ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் அவரது சட்டத்தரணிகள் கூறியுள்ளார்கள்.
ஆகவே, அவரை மற்ற கைதிகளுடன் சிறையில் அடைக்கவேண்டும், அதாவது, தனிமைப்படுத்தலை கைவிடவேண்டும் என அவர்கள் அவசர கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார்கள்.
தனிமைப்படுத்தலால் கிறிஸ்டாவின் உடல் நலமும், மன நலமும் மீண்டும் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால், அவர்களுடைய கோரிக்கையை ஏற்கக்கூடாது என அட்டர்னி ஜெனரல் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்போதைய மருத்துவச் சூழலில் அவரை மற்ற கைதிகளுடன் அடைப்பது முறையாக இருக்காது என்று கூறியுள்ள அட்டர்னி ஜெனரல், தனது மருத்துவ சிகிச்சை மற்றும் தான் எங்கு அடைக்கப்படுவது என்பது குறித்து கிறிஸ்டா முடிவு செய்யமுடியாது என்றும் கூறியுள்ளார்.