உடலிலும் மனதிலும் வலி... மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் தப்பிய பெண்
Christa Pike breaks silence after botched execution, says, she woke up in pain: அமெரிக்காவில், மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் பிழைத்த கிறிஸ்டா பைக் என்னும் பெண், தான் கடுமையான வலியில் கண் விழித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், ஊசி மூலம் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சியில் அவர் உயிரிழக்காமல் பிழைத்துக்கொண்ட விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றும் தனது தற்போதைய நிலை குறித்து அந்தப் பெண் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றும்போது...
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்திலுள்ள Nashville என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறையில், கிறிஸ்டா பைக் (Christa Pike, 50) என்னும் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

கிறிஸ்டா பைக், தனக்கு 18 வயதே இருக்கும்போது, தனது காதலனான டாடரில் ஷிப் (Tadaryl Shipp, 17) என்னும் இளைஞருடன் சேர்ந்து, கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்னும் 19 வயது இளம்பெண்ணை, சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்தார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி, சாட்சியங்கள் சூழ்ந்திருக்க, கிறிஸ்டாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக, அவரது உடலில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால், இரண்டு முறை ஊசி மூலம் மருந்தைச் செலுத்தியும் அவர் உயிரிழக்கவில்லை.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிறிஸ்டாவுக்கு இதயத்துடிப்பு இருப்பது தெரியவரவே, உடனடியாக அவர் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
உடலிலும் மனதிலும் வலி...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்டா, மீண்டும் கண் விழிப்பாரா என மருத்துவர்கள் சந்தேகப்பட்டுக்கொண்டிருக்க, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் கண் விழித்தார்.
அதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் 10ஆம் திகதி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் கிறிஸ்டா.

இந்நிலையில், தனக்கு நிகழ்ந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார் கிறிஸ்டா.
ஒரு மாதம் முன்பு, அதாவது, செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி, மரணமடைவதற்கு தயாராக, ரிவர்பெண்ட் ஆண்கள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன்.
மனதை சமாதானப்படுத்திக்கொண்டு, என்னை நேசிக்கும் மக்களிடம் விடைபெற்றுகொண்டு மரணதண்டனையை எதிர்நோக்கிச் சென்றேன்.
ஆனால், பல நாட்களுக்குப் பிறகு, மருத்துவமனை ஒன்றில் குழப்பத்துடனும், கடுமையான வலியுடனும் கண் விழித்தேன்.
அதற்குப் பிறகு நான் வலியை அனுபவிக்காத ஒரு கணம்கூட இல்லை. என உடல் வலிக்கிறது, என் கைகள் வலிக்கின்றன, என் தொண்டை வலிக்கிறது, பேசுவதற்கு கஷ்டப்படுகிறேன்.
வலி உடலில் மட்டுமல்ல, மனதிலும் ஆன்மாவிலும் கூட வலிதான் என்று கூறியுள்ளார் கிறிஸ்டா.
மரண தண்டனைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்த இரவுக்குப் பின் வாழ்வதைக் குறித்து நான் எண்ணவில்லை, ஆனால், என்னை இந்த பயங்கர நிலைமைக்கு ஆளாக்கிய சிலருடைய திறமையின்மையால் கடுமையாக காயமடைந்துள்ளேன்.
அதே நேரத்தில், என்னால் பயங்கர வலியையும் இழப்பையும் சந்தித்த, என்னால் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தைக் குறித்தும் நான் தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் கிறிஸ்டா.