மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் தப்பிய பெண்: சமீபத்திய தகவல்
Christa Pike conscious and speaking at hospital: மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் தப்பிய கிறிஸ்டா பைக் என்னும் பெண்ணுக்கு, சுயநினைவு திரும்பியுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவில், ஊசி மூலம் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சியில் அவர் உயிரிழக்காததால், பெரும் பரபரப்பு உருவானது.
மரண தண்டனை நிறைவேற்றும்போது...
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்திலுள்ள Nashville என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறையில், கிறிஸ்டா பைக் (Christa Pike, 50) என்னும் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

கிறிஸ்டா பைக், தனக்கு 18 வயதே இருக்கும்போது, தனது காதலனான டாடரில் ஷிப் (Tadaryl Shipp, 17) என்னும் இளைஞருடன் சேர்ந்து, கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்னும் 19 வயது இளம்பெண்ணை, சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்தார்.
இந்நிலையில், கடந்த வாரம், சாட்சியங்கள் சூழ்ந்திருக்க, கிறிஸ்டாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக, அவரது உடலில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால், இரண்டு முறை ஊசி மூலம் மருந்தைச் செலுத்தியும் அவர் உயிரிழக்கவில்லை. மாறாக, அவரிடமிருந்து குறட்டை சத்தம் கேட்பதை கவனித்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துள்ளார்கள்.

அப்போது, அவருக்கு இதயத்துடிப்பு இருப்பது தெரியவரவே, உடனடியாக கிறிஸ்டா மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிறிஸ்டா, சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக அவரது உடலில் ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டதால் சுயமாக சுவாசிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கிறிஸ்டா, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தார்கள்.
அத்துடன், உயிருக்குப் போராடிவரும் கிறிஸ்டாவைக் காப்பாற்ற மருத்துவமனை ஊழியர்கள் போராடிவருவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், கிறிஸ்டாவுக்கு சுயநினைவு திரும்பியுள்ளதாக தற்போது அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.

எதிர்பார்ப்புக்கு மாறாக கிறிஸ்டாவால் பேச முடிவதாக தெரிவித்துள்ள அவர்கள், அவரது கையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும், கையில் விலங்கிடப்பட்டு அவரது கை மருத்துவமனை கட்டிலுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், அடுத்து என்ன நடக்கும் என்று கூறமுடியாது என்றும், எப்படியும் அவர் குணமடைய நீண்ட காலம் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.