இமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வருடங்களாக நீடிக்கும் மர்மம்
சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேயே தொலைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
அணுசக்தி கருவி
1965 ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, சீனா அணுகுண்டு சோதனை ஒன்றை முன்னெடுத்தது. இதனையடுத்து சீனாவின் ஏவுகணை சோதனையைக் கண்காணிக்கும் பொருட்டு இமயமலையின் நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனா ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்தது.

அமெரிக்க மற்றும் இந்திய மலையேறுபவர்கள் தங்கள் சரக்குகளை தயார் செய்தனர். ஒரு ஆண்டெனா, கேபிள்கள் மற்றும் SNAP-19C எனப்படும் 13 கிலோ ஜெனரேட்டர். அதன் உள்ளே புளூட்டோனியம் இருந்தது.
மலையேறுபவர்கள் தங்கள் இலக்கை நெருங்கவிருந்த நேரம், திடீரென்று ஒரு பனிப்புயல் மலையை மூடியது. கீழே முகாமில், அதிர்ச்சியில் உறைந்துபோன அதிகாரிகள் குழு அவர்களைத் தொடர்புகொண்டு, எடுத்துச்சென்ற பொருட்களை தொலைக்க வேண்டாம், பத்திரப்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்த நிலையில், மொத்த கருவிகளையும் சிகரத்தின் ஒருபகுதியில் மறைத்துவிட்டு, உயிருடன் தப்பியுள்ளனர்.
நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கொண்ட அணுசக்தி கருவி ஒன்றை அவர்கள் இமயமலையில் விட்டுச் சென்றனர்.
அதன் பின்னர் அந்த அணுசக்தி கருவிகளை எவரும் பார்த்ததில்லை. சீனாவை உளவு பார்க்க, அப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்ததை அமெரிக்கா இதுவரை ஒப்புக்கொண்டதில்லை.
அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA முதலில் அந்த அணுசக்தி கருவியை காஞ்சன்ஜங்கா சிகரத்தில் நிறுவவே திட்டம் தீட்டியுள்ளது. உலகின் மூன்றாவது உயரமான சிகரம் அது.

பின்னர் இந்திய இராணுவம் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனாவை நிறுவ முடிவானது.
மூடி மறைக்கப்பட்டது
செப்டம்பர் மாதம் மலையேறத் தொடங்கிய குழு, அக்டோபர் 16 ஆம் திகதி பனிப்புயலில் சிக்கியுள்ளது. 1965ல் நடந்த இச்சம்பவத்தில், தொலைத்த அணு ஆயுத கருவிகளை மீட்க மீண்டும் அதே குழு, ஓராண்டுக்குப் பிறகு மலையேறியுள்ளது.
ஆனால் அவை மாயமாகியிருந்தது. பனிக்கட்டி, பாறை, உபகரணங்கள் என அனைத்தும் அந்தப் பனிச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 1978 வரையில் அமெரிக்காவின் அந்த ரகசிய திட்டம் மூடி மறைக்கப்பட்டது.

ஆனால் ஒரு பத்திரிகையாளர் மொத்தமாக அம்பலப்படுத்த, அமெரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது. சிஐஏ எங்கள் தண்ணீரை விஷமாக்குகிறது என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் ஒலித்தன.
ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்ம் ரகசியமாக முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது.
தற்போது வரையில், SNAP-19C எனப்படும் 13 கிலோ எடை கொண்ட புளூட்டோனியம் ஜெனரேட்டர் என்ன ஆனது என்பது மர்மமாகவே உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |