ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக கடத்தப்பட்ட 4 லட்சம் மக்கள்: பகீர் கிளப்பும் உக்ரைன்
உக்ரைன் மீதான போர் நான்கு வாரங்களை கடந்துள்ள நிலையில், வலுக்கட்டாயமாக 4 லட்சம் மக்களை ரஷ்யா கடத்திச் சென்றுள்ளதாக உக்ரைன் பகீர் கிளப்பியுள்ளது.
இதில் சிலர் பணயக்கைதிகளாகவும் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதனால் உக்ரைனுக்கு அழுத்தமளிக்க முடியும் என ரஷ்யா நம்புவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் சிறப்பு அதிகாரியான Lyudmyla Denisova என்பவர் தெரிவிக்கையில், மொத்தம் 84,000 சிறார்கள் உட்பட 402,000 மக்கள் ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கடத்தப்பட்ட மக்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும், சில முகாம்களில் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை எனவும் Lyudmyla Denisova தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவுக்கு குடிபெயர வேண்டும் என ஒப்ப்துதல் தெரிவித்த மக்களை மட்டுமே அழைத்துச் சென்றுள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐந்தாவது வாரத்தில் கடந்துள்ள நிலையில், இருபக்கமும் பெருத்த சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்ய தரப்பில் முக்கிய தளபதிகள் 15 பேர்களை இழந்துள்ளது.
ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், உக்ரைன் தரப்பில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், பெல்ஜியத்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் காணொளி மூலம் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, மேலதிக ஆயுதங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைடை மேற்கு நாடுகளிடம் முன்வைத்தார்.
இதனிடையே, மேலதிக உதவிகளை உக்ரைனுக்கு செய்ய இருப்பதாகவும், ஐரோப்பிய தலைவர்களுடனான சந்திப்புக்கு பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட மக்களுக்கு போதுமான உதவிகளை செய்து வருவதாகவும், அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 400,000 மக்கள் அவர்கள் விருப்பப்படியே ரஷ்யாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாகவும் ரஷ்ய கர்னல் ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.