சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை அளிக்கும் திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள ஒரு ஏமாற்றமளிக்கும் தகவல்
சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்குவது தொடர்பான திட்டம் ஒன்றை சுவிஸ் அரசியல் கட்சி ஒன்று முன்வைத்தது.
சுவிட்சர்லாந்தின், Social Democratic Party of Switzerland கட்சியினர் இந்த திட்டங்களை முன்னெடுத்தார்கள்.
அவர்கள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எளிதாக குடியுரிமை பெறும் வகையில், சுவிட்சர்லாந்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து, சுவிட்சர்லாந்தின் கடுமையான குடியுரிமை விதிகளை எளிதாக்குமாறு கோரிக்கை விடுத்தார்கள்.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Paul Rechsteiner, சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கும் ‘jus soli’ என்னும் கொள்கை, சுவிட்சர்லாந்தில் அறிமுகம் செய்யப்படவேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், அவரது கோரிக்கையை ஆரம்ப கட்டத்திலேயே சுவிஸ் செனேட் நிராகரித்துவிட்டது.
செனேட் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர், இந்த திட்டம் சுவிஸ் பாரம்பரியத்தின் அடிப்படையையே மறுப்பதாகும், அப்படி ஒரு திட்டம் கொண்டுவந்தால், அதை பலர் தவறாக பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்று அவர்கள் கூறிவிட்டனர்.
சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கும் திட்டம் மீதான விவாதத்தின்போது, நீதித்துறை அமைச்சரான Karin Keller-Sutter, இப்படி ஒரு திட்டம் அமுல்படுத்தப்பட்டால், அரசால் புலம்பெயர்தலை போதுமான அளவில் ஒழுங்குபடுத்த முடியாத நிலை உருவாகிவிடும் என்று கூறினார்.
அத்துடன், தற்போதைய விதிமுறைகள் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் சுவிஸ் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதை கிட்டத்தட்ட இயலாததாக்கிவிடுகின்றன என்ற விமர்சனத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆக, சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கும் திட்டத்தை, வாக்கெடுப்புக்கு கொண்டுவரக்கூட வாய்ப்புக் கொடுக்காமல், ஆரம்பத்திலேயே சுவிஸ் செனேட் தடுத்துவிட்டது பெரும் ஏமாற்றம்தான்!