காஸா சுரங்கப்பாதைகளில் சிக்கியிருக்கும் பொதுமக்கள்... மத்திய கிழக்கு நாடொன்று கோரிக்கை
ஹமாஸ் படைகளால் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதைகளில் தற்போது சிக்கியுள்ள 200 பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்கும் பொருட்டு துருக்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சரணடைய மாட்டார்கள்
மூத்த துருக்கி அதிகாரி ஒருவர் தொடர்புடைய தகவலை வெளியிட்டுள்ளார். காஸாவில் வைத்து கொல்லப்பட்ட இஸ்ரேல் இராணுவ வீரரின் சடலம் நீண்ட 11 வருடங்களுக்குப் பிறகு நெதன்யாகு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையிலேயே,

துருக்கி அதிகாரிகள் தற்போது சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள பொதுமக்கள் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் வசம் உள்ள ரஃபா பகுதியில் பதுங்கியுள்ள போராளிகள் இஸ்ரேலிடம் சரணடைய மாட்டார்கள் என்று ஹமாஸ் படைகள் முன்னதாக கூறியது.
மட்டுமின்றி, ஒரு மாத காலமாக நீடிக்கும் போர் நிறுத்தத்தை அச்சுறுத்தும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று மத்தியஸ்தர்களை ஹமாஸ் படைகள் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, இராணுவ அதிகாரி ஹதர் கோல்டினின் சடலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த 2014 இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது காஸாவில் நடந்த தாக்குதலில் இராணுவ அதிகாரி ஹதர் கோல்டின் கொல்லப்பட்டார்.

இவரது சடலத்தையே, தற்போது ஹமாஸ் படைகள் ஒப்படைத்துள்ளது. துருக்கி அதிகாரிகளும் ஹமாஸ் படைகளின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.
நெருக்கமான உறவு
அதே நேரத்தில், சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ள சுமார் 200 காஸா பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்களை உறுதி செய்வதற்கு பணியாற்றி வருவதாகவும் துருக்கி அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு துருக்கியும் முக்கிய பங்காற்றியுள்ளது.

ஹமாஸ் படைகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள துருக்கி, காஸாவில் இஸ்ரேலின் கொடூர இராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தும் வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |