பிரித்தானியாவிடமிருந்து பறிக்கப்படும் ஒலிம்பிக் பதக்கம்? என்ன காரணம்? சிக்கிய தடகள வீரர்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த ரிலேவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரித்தானியா தடகள வீரர் CJ Ujah தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டோக்கியோவில் நடந்து முடிந்த 2020 ஒலிம்பிக் போட்டியில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 113 பதக்கங்களுடன் அமெரிக்க முதலிடத்தை பிடித்தது.
22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் பிரித்தானியா 4வது இடத்தை பிடித்தது.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியதாக நான்கு விளையாட்டு வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தடகள ஒருமைப்பாடு பிரிவு அறிவித்துள்ளது.
மொராக்கோவின் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் சாதிக் மிகோவ், ஜார்ஜிய ஷாட் புட்டர் வீரர் பெனிக் அப்ரமியன், கென்ய sprinter Mark Otieno Odhiambo மற்றும் பிரித்தானியா sprinter CJ Ujah ஆகிய நால்வர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்கள் 4x100 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரித்தானியா அணி வீரர்கள் நான்கு பேரில் CJ Ujah ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 6-ம் திகதி நடந்த ஆண்கள் 4x100 மீட்டர் ரிலேவில் இத்தாலி அணி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது, பிரித்தானியா அணி 2-வது இடம் பிடித்து வெள்ளியும், கனடா அணி 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு வீரர்களுக்கு எதிரான ITA [சர்வதேச சோதனை முகமை] முடிவுக்கு காத்திருப்பதாக தடகள ஒருமைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.
ஊக்கமருந்து வீதி மீறல்கள் நடந்துள்ளதா மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ITA தீர்மானிக்கும்.
உலக தடகள ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள் அல்லது நடத்தை விதிமுறைகளின் கீழ் நடத்தப்படும் விசாரணையில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்த நான்கு வீரர்களும் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து விதிகளை மீறியது உறுதியானால், பிரித்தானியா ரிலே அணி வெள்ளிப் பதக்கங்களை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3வது இடத்தை பிடித்த கனடாவிற்கு வெள்ளிப்பதக்கமும், நான்காவது இடத்தில் உள்ள சீனா வெண்கலமும் வழங்கப்படும்.