நாங்களா.. நீங்களா? துண்டுச்சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பழனிசாமி, சசிகலா அரசியல் விட்டு விலகுவதாக அறிவித்தது அவரின் விருப்பம் என தெரிவித்தார்.
மேலும் அதிமுக அரசு மீது திமுக சுமத்தி வரும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்த பழனிசாமி, அதிமுக அரசு மீது திமுக சுமத்துகிற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.
திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பல பேர் மீது இன்று வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதை நாங்கள் குறிப்பிடுகின்றோம்.
ஆனால், அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து ஒரு பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
அதற்கு தான் நான் தெளிவுப்படுத்தினேன், ஒரு மேடை அமையுங்கள், நானும்-நீங்களும் விவாதிக்கலாம், எந்தவொரு துண்டுச்சீட்டும் இல்லாமல் மேடையிலே பேசுங்கள், எங்கள் மீது சொல்லும் குற்றச்சாட்டிற்கு தகுந்த பதிலை நாங்கள் அளிக்கிறோம்.
உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என நாங்கள் சொல்கிறோம், அதற்கான பதிலை நீங்கள் சொல்லுங்கள் என பலமுறை கூட்டத்தின் வாயிலாக தெரியப்படுத்துகின்றேன்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவும் தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்டாலினுக்கு பழனிசாமி சவால் விட்டுள்ளார்.