ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சி அளிக்கிறது! குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சி அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
படுகொலை
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது தமிழக்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை தொடர்பில் 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் தலைநகரில் படுகொலை செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கூறுகையில், ''பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |