மாதம் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டத்தை தொடங்கிய முதல்வர் விஜய்
cm vijay launch Dream Olympics 2036 for tamilnadu athletes win medal in Olympics: தமிழ்நாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கில் Dream Olympics 2036 என்ற திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் விஜய் கௌரவம்
20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46வது சதுரங்க ஒலிம்பியாட் தொடர்களில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகைகளை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஏற்கனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டில் தடகள பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு, 1 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.

ஆசிய விளையாட்டு போட்டியில், கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036
ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைக்கும் நோக்கில், ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ (Dream Olympics 2036) என்ற திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games) மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (Commonwealth Games) பதக்கம் வெல்லும் அனைத்து வீரர், வீராங்கனைகளும் நேரடியாகச் சேர்க்கப்பட்டு ஊக்கவிக்கப்படுவர்.

தேர்வாகும் வீரர்களுக்கு உயர்தரப் பயிற்சிக்காக ஆண்டிற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியுடன், அவர்களின் தினசரித் தேவைகள் மற்றும் பராமரிப்பிற்காக மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி, வெள்ளி வென்றால் ரூ.3 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.2 கோடி பரிசு என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர்களுக்கு 50% ஊக்கத்தொகை
இந்த நிகழ்வில் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, விளையாட்டுத்துறைக்கு என்ன தேவை என்று கேட்டாலும் அதனை உடனடியாக செய்து கொடுக்குமாறு உத்தரவிடக்கூடிய முதல்வர் நமக்கு கிடைத்துள்ளார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை.
முதல்வரின் கனவு திட்டம் என்பது, ஒரு ஒலிம்பிக் நகரத்தை உருவாக்க வேண்டும், அதில் உலகத் தரம் வாய்ந்த 46 விளையாட்டு போட்டி அரங்குகளை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் 10 ஒலிம்பிக் அகாடமிகளை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.
வரலாற்றில் முதல் முறையாக ரூ.1,000 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டை விளையாட்டுத்துறைக்காக முதல்வர் விஜய் ஒதுக்கினார்.
விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களுக்கு 50% ஊக்கத்தொகை வழங்கப்படும்" என அறிவித்துள்ளார்.