ஒரு வழியாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார் அமெரிக்க பெண் ஊடகவியலாளர்
தாலிபான்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்த சி.என்.என். செய்தி நிறுவனத்தின் பெண் ஊடகவியலாளர் கிளரிசா வார்ட் (Clarissa Ward) ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக, ஊடகவியலாளர்கள், நேட்டோ அமைப்பினருக்கு உதவி செய்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் தாலிபான்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது மற்றும் அது தொடர்பான செய்திகளை அந்நாட்டிலேயே தங்கி அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என். நிறுவனத்தில் ஊடகவியலாளராக பணியாற்றி வரும் பெண் ஊடகவியலாளர் கிளரிசா வார்ட் பதிவிட்டுவந்தார்.
இவர் தாலிபான்களிடம் பேட்டியும் எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானின் களநிலவரத்தை இவர் பல்வேறு கோணங்களில் உலக நாடுகளுக்கு வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், சி.என்.என். ஊடகவியலாளர் கிளரிசா வார்ட் நேற்று ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கிளரிசா வார்ட் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய கிளரிசா உள்பட அனைவரும் தற்போது கத்தார் நாட்டில், தலைநகர் தோஹாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கத்தாரில் இருந்து அவர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

