நிலக்கரி சுரங்கத்தில் துயர சம்பவம்: 50 கடந்த பலி எண்ணிக்கை
ஈரானில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பில் 51 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
69 ஊழியர்கள் சுரங்கத்தில்
தெற்கு கொராசன் மாகாணத்தில் நடந்த இந்த வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தப்பியுள்ளனர். தபாஸில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தின் இரண்டு தொகுதிகளில் மீத்தேன் வாயு கசிவால் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் போது 69 ஊழியர்கள் சுரங்கத்தில் இருந்துள்ளதாக மாகாண ஆளுநர் Javad Ghenaatzadeh தெரிவித்துள்ளார்.
சுரங்கத்தின் இரண்டாவது தொகுதியில் 22 ஊழியர்களும் முதற் தொகுதியில் 47 ஊழியர்களும் சம்பவத்தின் போது இருந்துள்ளனர். இந்த நிலையில், எத்தனை பேர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் மற்றும் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர் என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஈரான் ஜனாதிபதி இரங்கல்
வெடிப்பை எடுத்து, முதற்கட்டமாக 30 பேர்கள் இறந்துள்ளதாகவே தகவல் வெளியானது. ஆனால், அதன் பின்னர் 51 பேர்கள் இறந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 கடந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இரங்கல் தெரிவித்துள்ளார். தபாஸ் சுரங்கமானது 30,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது.
ஈரானிலேயே மதிப்புமிக்க மற்றும் மிகப் பெரிய சுரங்கம் இதுவென்றே கூறப்படுகிறது. தற்போது, காயமடைந்தவர்களுக்கு உதவி வழங்குவதற்கும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய ஊழியர்களை மீட்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |