ஏவுகணைகளிலிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க... அமைந்த 10 நாடுகள் கூட்டணி
ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்க ஒரு கூட்டணியை அமைப்பதாக உக்ரைனும் மேலும் ஒன்பது நாடுகளும் திங்களன்று அறிவித்துள்ளன.
தற்காப்பு கட்டமைப்பு
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை எதிர்த்துப் போராடி வரும் உக்ரைனின் அனுபவத்தைப் பயன்படுத்தவும் முடிவு.

ஐரோப்பாவிற்காக ஒரு பகிரப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புத் திறனை உருவாக்குவதே எங்கள் இலக்கு என்று, பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அந்த 10 நாடுகளும் ஓர் அறிக்கையில் தெரிவித்தன.
தனது நாட்டைத் தாக்கிச் சிதைத்து, ஐரோப்பாவின் பிற பகுதிகள் மீது குறிவைத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதில் உதவுமாறு, ஜெலென்ஸ்கி இருபத்து நான்கு தலைவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், குரூஸ் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களைக் காட்டிலும் இடைமறித்துத் தடுப்பதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்படும் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைத் தாங்கள் அங்கீகரிப்பதாக ஜெலென்ஸ்கியும் டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் தெரிவித்தனர்.
மேலும், எதிர்கால ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுத்து முறியடிக்க, ஒருங்கிணைந்த ஏவுகணைத் தற்காப்பு கட்டமைப்பு வடிவிலான ஒரு விரிவான தீர்வு ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கு அவசியமென நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் 10 தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
தனித்துவமான அனுபவம்
மட்டுமின்றி, ரஷ்யா தொடுத்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் மூலம் உக்ரைன் பெற்ற தனித்துவமான அனுபவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான காலக்கெடு எதுவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை; மேலும், இத்திட்டத்தில் பிற நாடுகளும் இணைய வாய்ப்புள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பரவலான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் முனையங்கள் மீதான உக்ரைனின் சமீபத்திய தொலைதூரத் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும், அவர்கள் ரஷ்யப் பிரதேசத்தைத் தாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு இடத்திலும், நாங்கள் அதேபோல் பதிலடி கொடுப்போம், ஆனால் எங்கள் தாக்குதல்கள் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று புடின் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் தனியாகச் சந்தித்து, உக்ரைனின் தேவைகள் மற்றும் ஐரோப்பியக் கண்டத்திற்கு ரஷ்யா விடுக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

குளிர்காலத்திற்கு முன்னதாக, தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளுடனான முயற்சிகளைத் துரிதப்படுத்த ஜெலென்ஸ்கி தீவிரமாக உள்ளார்.
அக்குளிர்காலத்தில் உக்ரேனியர்களுக்கு மின்சாரம், வெப்பம் மற்றும் தண்ணீர் கிடைப்பதைத் தடுப்பதற்காக ரஷ்யா வழக்கமாகத் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |