இடிந்து விழுந்த கட்டிடம்... 6 நாட்கள் மரணத்தை நேரில் சந்தித்த பெண்: நடுங்க வைத்த சம்பவம்
சீனாவின் ஹூனன் மாகாணத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் 6 நாட்கள் சிக்கியிருந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
அடையாளம் காணப்படாத குறித்த பெண்ணுடன், இதுவரை 10 பேர்கள் அந்த கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூனன் மாகாணத்தின் சாங்ஷா நகரிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன், டசின் கணக்கானோர் இன்னமும் மாயமாகியுள்ளதாகவே தெரிய வந்துள்ளது. இதனால் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 132 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குறித்த பெண்மணி வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு மீட்கப்பட்டார் என உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார் எனவும், மேலும் காயம் ஏற்படாமல் இடிபாடுகளுக்குள் அவர் சிக்கியிருந்ததால், அவரை வெளியே மீட்க முயன்றபோது மீட்பு ஊழியர்களுடன் அவரால் பேச முடிந்தது என கூறப்படுகிறது.
மீட்புக் குழுவினர் மோப்ப நாய்கள், ட்ரோன்கள், மின் கருவிகள் மற்றும் நவீன கருவிகளை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுவரை உயிருடன் மீட்கப்பட்ட 10 பேர்களும், ஆபத்தான நிலையில் இல்லை எனவும், மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29ம் திகதி 6 மாடி கொண்ட அந்த குடியிருப்பின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 9 பேர்கள் பொலிசாரால் கைதாகியுள்ளனர். மேலும், வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பொறுப்பில் ஈடுபட்ட மேலும் மூன்று பேர் கைதாகியுள்ளனர்.
மட்டுமின்றி, கட்டிடத்தின் நான்காவது முதல் ஆறாவது மாடியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு தவறான பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கியதாகக் கூறப்படும் மேலும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.