காதலனை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு வன்கொடுமை- கோவையில் அதிர்ச்சி
கோவையில், காதலனை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை 3 பேர் கும்பல் கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கூட்டு வன்கொடுமை..,
மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி, விடுதியில் தங்கி கோவையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த மாணவியும், கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இரண்டு பேரும் வார விடுமுறை நாட்களில் வெளியில் எங்காவது சென்று நேரத்தை செலவிட்டு வந்துள்ளனர்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று இரவு இவர்கள் இருவரும் காரில் கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்றனர்.
  
நள்ளிரவு 11 மணிக்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திவிட்டு 2 பேரும் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் காரின் கதவை தட்டி உள்ளே இருந்த இருவரையும் மிரட்டியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள், காரில் இருந்த காதலனை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.
பின்னர் மர்மநபர்கள் அந்த கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கிச் சென்று ஒருவர் பின் ஒருவராக வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதன்பின், மயக்கம் தெளிந்த காதலன் செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், படுகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை 5 மணி நேரம் கழித்து தேடி காயங்களுடன் மீட்ட பொலிஸார் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத்தொடர்ந்து, தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், காதலனை தாக்கிவிட்டு மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |